பக்கம்:பாலைப்புறா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 137

உதவிப் பொதுமேலாளர் சூரியநாராயணன், முப்பதாயிரம் ரூபாய் சுழல் நாற்காலியில் உட்கார்ந்தபடியே, ஒரு லட்சம் ரூபாய் மேஜையில் உள்ள இண்டர்காமை அழுத்தி, இரண்டே இரண்டு வார்த்தைகள் பேசியிருபபார். ஐந்து நிமிடத்தில், சங்கர் வந்துவிட்டான். வெள்ளை டையை ஒரு இழுப்பு இழுத்து, கழுத்தை இறுக்கியபடியே உள்ளே வந்தான். எதிரே உள்ள தேக்கு நாற்காலியில் உட்காரப் போனவனை 'லெட் அஸ் சிட் இன் ஸோபா செட்’ என்றார் சூரி, பிளாஸ்டர் போட்ட வலது பெருவிரலைதூக்கி வைத்தபடியே நின்ற சங்கரனுக்கு பாதிப்பயம். மீதி சந்தோஷம். இந்த சூரிய நாராயணன் எவரையாவது ஒரு ஊழியரை சோபா செட்டில் உட்காரச்சொன்னால், ஒன்று அவரை கணக்கு தீர்ப்பதாக இருக்கும் அல்லது கண்ணுக்குள் ஒற்றுவது போலவும் இருக்கும்.

சங்கரன், உள்ளூர உதறலோடும், பயபக்தியோடும், ஒரு சின்ன சோபா துண்டில் உட்கார்ந்தான்; நீளவாக்கிலான சோபாவில், கைகளை விரித்துப் போட்டு உட்கார்ந்த சூரிய நாராயணன், சிரித்தபடியே அவனைப் பாராட்டினார்.

"கன்கிராட்ஸ் மை டியர் சங்கர்!”

'தேங்க்யூ சார்’.

செய்தியைச் சொல்லும் முன்னால் நன்றி சொன்ன சங்கரனை, சூரி முகம் சுழித்துப் பார்த்தார். அந்தரங்கமான அந்த முடிவு இவனுக்கு எப்படித் தெரியும் என்பது மாதிரி...

"நான் எதுக்காக ஒங்களை கூப்பிட்டேன்னு தெரியுமா மிஸ்டர் சங்கர்”.

‘இல்ல சார். இல்லல்ல சார்’.

‘ஒ... கே... மை டியர் சங்கர். மனோகர், இடத்தில ஒங்களை நியூயார்க் அனுப்புவதுன்னு... நிர்வாகம் தீர்மானித்திருக்கு... மனோகரால், நம் கம்பெனிக்கு ஏற்பட்ட தலைக்குனிவை, எப்படி நிமிர்த்தலாமுன்னு நாங்க மண்டையை குழப்பினபோது... அந்த உலகக் கம்பெனியே டோன்ட் ஒர்ரின்னு டெலக்ஸ் மெசேஜ் கொடுத்தது... டெலிபோன்லயும், சொல்லிட்டு... எய்ட்ஸ் பரவுனாலும் பரவாட்டாலும், அதனுடைய புதிய வானிலை கம்ப்யூட்டர் மாடல்கள் நம் கம்பெனி மூலம் கம்பெனி கம்பெனியாய் பரவணும்... என்கிற ஆசை... அதோட இந்த மாதிரி எய்ட்ஸ் கேஸ்கள் அமெரிக்காவில் சகஜமாம்...அதே சமயம்... மனோகருக்கு பதிலாய் அனுப்புகிறவரை ஹெச்.ஐ.வி. இல்லை என்கிற வெளிப்படையான மெடிக்கல் சர்டிபிகேட்டோடு, அனுப்பி வைக்கச் சொன்னாங்க... அதனால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/137&oldid=1405139" இலிருந்து மீள்விக்கப்பட்டது