பக்கம்:பாலைப்புறா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 பாலைப்புறா

நாளைக்கே மெடிக்கல் டெஸ்டுக்கு போங்க... விசா வாங்குறதில பிராப்ளம் இருக்காது... ஒகே. யூ கேன் கோ... பி.ஆர்.ஒ. காத்திருக்கிறார். அவர் மட்டும்... உள்ளூர் செய்தியாளர்களை ‘மகிழ்ச்சியாய்' வைத்திருந்தால், நம் கம்பெனியும், மனோகரும் இப்படி நாறி இருக்காது. அதனால பப்ளிக் ரிலேஷன் ஆபீசரை வீட்டுக்கு அனுப்பப் போறோம். நீங்க சீனியர் என்கிறதால... இதைச் சொல்றேன்... ஒகே. சங்கர்... நியூயார்க் புறப்படுறதுக்கு முன்னால என்னைப் பார்த்துட்டுப் போங்க”

சங்கரனுக்கு, உடம்பெல்லாம் ஆடியது. நேற்று முதல், அவன்படும்பாடு அவனுக்குத்தான் தெரியும். டாக்டர் சந்திரா, ஹெச்.ஐ.வி. ஊடுருவலின் ஆரம்ப காலஅறிகுறிகள் பற்றித் தெரிவித்தபோது, ஆடிப்போனவன், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல், கலைவாணி வேறு அவன் பெருவிரலைக் கடித்துவிட்டாள். ரத்தம் சொட்டச் சொட்டக் கடித்துவிட்டாள். டாக்டர் சந்திரா, என்னதான்.அவனுக்கு ஆறுதல் சொன்னாலும், அவன் சமாதானப்படவில்லை. ஒரு ஹெச்.ஐ.வி. நோயாளி ரத்தம் வரும் அளவுக்குக் கடித்தாலும், அந்தக் கடிவாயில், அந்தக் கிருமிகள் எழுச்சிப் பயணங்களை மேற்கொள்ள முடியாது என்று சந்திரா, அடித்துச் சொன்னாள். எச்சிலிலோ, பற்களிலோ அந்தக் 'கிருமிகள்‘ சொல்லும்படியாய் இருக்காது என்றாள். சங்கரனுக்கு சந்தேகம்... அது என்ன 'சொல்லும்படியாய்'. ஒரு வேளை, கலைவாணியின் பற்களில் ரத்தம் இருந்திருக்கலாமே... எத்தனை பேர் பற்களில் தொட்டாலே ரத்தம் கொட்டுது... கலைவாணியின் வாய் ரத்தம்... இந்தக் கை ரத்தத்துடன் கலந்து இருக்கலாமே... இந்த லட்சணத்தில் எப்படி ஹெச்.ஐ.வி. டெஸ்டுக்கு போவது... ஒன்று கிடக்க ஒன்று சொல்லிவிட்டால், உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா கதைதானே... அந்த மனோகரைப் போல்தானே ஆக வேண்டும்... இந்த சந்திரா கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டாளே. இவள்பார்க்க நினைத்தாலும், அந்த டாக்டர் அசோகன் பயல், இவளை அப்படிப் பார்க்க விட மாட்டானே... அடேய்... மனோகரா... அப்போதும் என்னை போகவிடல. இப்போதும் என்னை போகவிடல... என்னடா இதெல்லாம்?

சங்கரன், டையை இழுத்துவிட்டபடியே, நாக்கையும் இழுத்துவிட்டான்.

"சார். சார்... எனக்கு”.

"என்ன வேணும் சொல்லுங்க... நியூயார்க்லே அக்காமடேஷனப் பற்றி கவலைப்படவேண்டாம். அந்தக் கம்பெனியோட கெஸ்ட் அவுஸ்லயே தங்கிக்கலாம்.”

‘வந்து... வந்து...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/138&oldid=1405140" இலிருந்து மீள்விக்கப்பட்டது