பக்கம்:பாலைப்புறா.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 பாலைப்புறா

அழுத்தி விட்டு, சூரி, ‘மனோகர்' என்று ஒற்றைச்சொல்லை சொல்லிவிட்டு, இண்டர்காமை வைத்தார். உள்ளே வந்த பி.ஆர்.ஒ. உட்காரக் கூடாது என்பதற்காகவே எழுந்து நின்றார்.

அந்தக் கம்பெனியின் பொது மக்கள் தொடர்பில்லாத அதிகாரி வெளியேறுவதற்கும், மனோகர் உள்ளே நுழைவதற்கும் மூன்று நிமிட இடைவெளி நேரமே இருந்தது. சூரியநாராயணன், மனோகரையே உற்றுப் பார்த்தார். தாடி, மீசை இல்லை; அவன் கண்கள் கூட மெலிந்து இருப்பது போல் அவருக்குப்பட்டது. ஆனாலும், அந்த முகத்தில் ஜீவகளை இன்னும் போகவில்லை என்பதையும், அவர் புரிந்து கொண்டார். லேசர் ஒளிக் கற்றைகள், பொதுவாக, தன்னிடம் வரும் மின்சக்தியில் கால்வாசியைத்தான் ஒளியாக மாற்றக்கூடியவை... அதே மின்சக்தியின் பாதியை ஒளிக் கூறுகளாக மாற்றும் உத்தியை கண்டுபிடித்துச் சொன்னவன் இந்த மனோகர்; இந்த உத்தி, கம்பெனியின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையில் உள்ளது. இவனது உத்திக்கு உருவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது, இவனுக்கே தெரியாது. தெரிந்தால், ராயல்டி கேட்டுவிடுவான் என்ற சந்தேகம். கம்பெனி இயக்குனர்களில் ஒருவரது மகன் பெயரிலோ அல்லது மருமகள் பெயரிலோ இந்தக் கண்டுபிடிப்பு வெளியாகலாம்...

மனோகர், நீட்டாகவே வந்திருந்தான்; ஆனாலும் அவன் மனதில் எதிரே உள்ள உதவிப் பொதுமேலாளருக்குப் பதிலாக, கலைவாணியே வியாபித்திருந்தாள். டாக்டர் சந்திரா எழுதிக் கொடுத்த மாத்திரையை... காலையிலேயே, அவள் அரை மயக்க நிலையில் இருந்த போதே, மீனாட்சி கொடுத்துவிட்டாள். இன்று மாலையில் போய்த்தான், மனம் விட்டுப் பேச வேண்டும். அவள் என்ன சொன்னாலும், அதற்குக் கட்டுப்பட வேண்டும்.

"உட்காருங்க மிஸ்டர். மனோகர்!”

“பரவாயில்லை சார்".

"ஐஸே யூ சிட்டவுன்... கண்டகண்ட பயல்கஎல்லாம் உக்காரும் போது, நீங்க உட்காரப்படாதா...?”

மனோகர், சங்கரன் உட்கார்ந்த ஒற்றைச் சோபா துண்டிலேயே உட்கார்ந்தான். சூரியநாராயணன்தான், சோபாவில் கை பரப்பியோ அல்லது கால் மேல் கால் போட்டோ உட்காராமல், அதன் மூலையில் உட்கார்ந்தார். மனோகர் ஆற்றொண்ணா துயரத்தோடு பேசினான்.

"நடந்தது எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு சார்... என்ன.. ஒங்க கிட்ட ஒப்படைக்கேன் சார்... என்னால... என்னால..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/140&oldid=1405142" இலிருந்து மீள்விக்கப்பட்டது