பக்கம்:பாலைப்புறா.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 141

"அழாதீங்க... மிஸ்டர் மனோகர். சுய இரக்கம் கூடாது; நீங்க எனக்கு உடன்பிறவா தம்பி மாதிரி”.

மனோகருக்கும், சிறிது தெம்பு வந்தது; சூரிய நாராயணனுக்குத்தான் அவனைப் பார்க்க, பார்க்க, அந்த தெம்பு போய்க் கொண்டிருந்தது. ஆனாலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அவர் பேசினார். எய்ட்ஸ் துறையில் தனக்குள்ள ஞானத்தை நன்றாகவே விளக்கினார்.

“ஒரு ஹெச்.ஐ.வி. நோயாளி, முன்னெச்சரிக்கையோடு இருந்தால், பத்து வருடத்திற்கும் அதிகமாகவே, தனக்கும், பிறருக்கும் பயன்படலாம் என்பது எனக்குத் தெரியும் மனோகர். இந்தக் கிருமிக்காரரை கட்டிப்பிடிப்பதாலோ, ஒரே தட்டில் சாப்பிடுவதாலோ, ஒன்றாகப் படுப்பதாலோ, இந்த நோய் தொற்றாது என்பதும் தெரியும் மனோகர். இந்த நோயாளியோட இருமலும், தும்மலும், எச்சிலும் இந்த நோயைப் பரப்பாது என்பதும் எனக்குத் தெரியும் தம்பி. எய்ட்ஸ் நோயாளியோடு.. கொஞ்சம், கொஞ்சமாய் எச்சரிக்கையோடு பழகினால், அந்த நோய் அடுத்தவருக்கு வராது. இன்றைய டென்ஷன் பிடித்த வாழ்க்கையில்... எல்லாவற்றிலும், எப்போதும் ரிஸ்க் எடுக்கிறோம். உதாரணமாய், நம்மை எமலோகத்துக்கு அனுப்பக் கூடிய லாரிக்கு இரண்டடி பக்கத்திலேயே நடக்கோம். ஒரு சைக்கிள்காரன்கூட, தனக்குத்தானே ஒரு கணக்குப் போட்டு, எதிரே ஓடிவருகிற பஸ்ஸுக்கு குறுக்கே இரண்டடி இடைவெளியில், உயிருக்குரிஸ்க் எடுத்து ஒட்டுறான்; ஆக வாழ்க்கையே... இரண்டடி மரண இடைவெளியில்தான் ஒடுது. மரணத்துக்குப் பக்கமாகவே நடக்கோம். மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமலே பறக்கோம். பிறப்போடு பிறந்தது மரணம்... அதனால ஒரு எய்ட்ஸ் நோயாளியோடு பழகுவதோ, பகிர்வதோ, எல்லா... ரிஸ்கையும் மாதிரி சாதாரண ரிஸ்க்குத்தான். இதுக்கு ரொம்ப அலட்டிக்க வேண்டியதில்லை.”

மனோகருக்கு, மகிழ்ச்சி ஏற்படவில்லைதான். ஆனால் துக்கம் குறைந்தது. நல்ல வேளையாக, அவன் நினைத்ததுபோல் அவர்பேசவில்லை. இன்னும், தன்மீது கம்பெனிக்கு அன்பு இருக்கிறது, அனுதாபம் இருக்கிறது. இந்த இரண்டிற்கும் மேலாய் நம்பிக்கை இருக்கிறது. இப்போது இந்த மனோகரனே, அவரிடம் குழந்தையானான்.

‘ஒங்களுக்கு... எப்படி நன்றி சொல்லறதுன்னே புரியல சார் வீட்டுக்கு அனுப்பிடுவீங்களோன்னு பயந்தேன் சார். இன்றைக்கு பாருங்க சார் என் செக்ஷன்ல போய் உட்கார்ந்தேன். ஒருத்தர் கூட அனுதாபமா கேட்கல. என்னைப் பார்த்ததும், எல்லோரும் சொல்லிவைத்தது மாதிரிபுறப்பட்டாங்க சார். இன்னும் திரும்பி வரல்ல சார். நீங்க இப்படி பேசுன பிறகுதான், என் வயித்தில பால் வார்த்தது மாதிரி இருக்குது. ஒங்க அரவணைப்புல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/141&oldid=1405148" இலிருந்து மீள்விக்கப்பட்டது