பக்கம்:பாலைப்புறா.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

அந்தக் கம்பெனியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாயோடு, மனோகர் வெளியேறினான்... கம்பெனியை சும்மா சொல்லக் கூடாது. அவனுக்கு சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக, இருபத்தையாயிரம் ரூபாயை நோட்டுக்களாகவும், எஞ்சிய தொகையை செக்காகவும் கொடுத்தார்கள். இந்தப் பணத்தை கொடுக்கும்போது, அக்கெளண்டன்ட் பெண், கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாலும், அந்தப் பணத்தை, கோவில் குருக்கள் பிரசாதத்தை தூக்கிப் போடுவது போலவே போட்டாள்.

அந்தப் பணத்தை பார்த்ததாலோ அல்லது ஒரு நாள் இடைவெளியாலோ, மனோகருக்கு, அத்தனைக் குழப்பத்திலும் ஒரு தெளிவு ஏற்பட்டது. நாட்டு வைத்தியரை நம்பி மோசம் போனதை, கலைவாணியிடம் சொன்னால், அவள், தன்னையும், தன் பேச்சையும் ஏற்றுக் கொள்வாள். இந்த இரண்டு லட்சம் ரூபாயையும், கலைவாணியின் பெயரிலேயே பேங்கில் டிபாசிட்டாக போட வேண்டும். வட்டி மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்... லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் அவள் நகைகளை, அவள் இஷ்டப்பட்டால் விற்று, அந்தப் பணத்தோடு, தான் சேமித்த பணத்தையும் சேர்த்து, சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும். அதுவும் கலைவாணி பெயரிலேயே... வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்... ஏதாவது ஒரு கம்பெனியில் சேர்ந்து விடலாம். தமிழ் பத்திரிகைகளை படிக்காதவர்கள் வேலை பார்க்கும் எந்தக் கம்பெனியிலாவது கம்ப்யூட்டர், இருக்கத்தான் செய்யும். ஆனாலும் ஆறப் போட்டு செய்ய வேண்டிய காரியம்; கலைவாணி... இப்போ எப்படி இருக்காளோ... கண் விழித்தாளோ இல்லையோ, நல்ல வேளையாய் மீனாட்சி கிடைத்தாள், அசல் மதுரை மீனாட்சிதான்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/143&oldid=1405150" இலிருந்து மீள்விக்கப்பட்டது