பக்கம்:பாலைப்புறா.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

அதே பாதைதான்... அதே வெள்ளையன்பட்டிதான். ஆனாலும் கலைவாணியின் கண்ணுக்கும், கருத்துக்கும் அதலபாதாள வித்தியாசம்.

போனவள், வந்தவள் ஆனாள்... சூரியன் உதிக்கும் கிழக்குதிசை அது அஸ்தமிக்கும் மேற்கு திசையானது. கார், வில் வண்டியானது. ஆனந்த அழுகை, துக்கித்த சிரிப்பானது. ஆயிரங்கால் மண்டபமாய் தோன்றிய வாழைத் தோப்பு, குலையிழந்த வெறுமைப் பூமியானது. மயில்போல் தோகை விரித்த கல்வாழை, எவருக்கும் பயன்படாத இலை கிழிந்த மரமாக காற்றில் அல்லாடியது. அதோ, அவள் முன்னின்று அடிக்கல் நாட்டிய இடத்தில் தென்னங் கீற்றுக் கொட்டகையில், ஒரு தற்காலிக மருத்துவமனை இருப்பதுபோல் தோன்றியது. அங்கே நிர்வாகப் பொறுப்பை ஏற்க வேண்டியவள், முதல் எய்ட்ஸ் நோயாளி என்று சேர வேண்டிய நிலைமை... எல்லோருக்கும் முழு முகத்தை காட்டியவள், முக்காடு போட்டிருக்கிறாள்...

அந்த வில்வண்டி குலுங்கிக் குலுங்கி, அவளையும், குலுக்கி எடுத்தது. ஆங்காங்கே தெரிந்தவர்களைப் பார்த்ததும், இவள், தன்னை தெரியப்படுத்திக் கொள்ள விரும்பாமல், முக்காட்டை இழுத்துப் போட்டு, முகம் மறைத்து, முகம் திரும்பினாள். ஆனாலும், பலர் அவளை அடையாளம் கண்டு கொண்டார்கள். அந்த வில்வண்டி ஒடிக் கொண்டே இருந்தது. ஊருக்குள், சுற்றமும், நட்பும் போல விழுது விட்டு, கிளை பரப்பிய ஆலமரத்தைச் சுற்றிவட்டமாகக் கட்டப்பட்ட திண்ணையில் உட்கார்ந்து, உள்ளூர் விவேகிகளுடன் பேசிக் கொண்டிருந்தவர்கள், திடுக்கிட்டு எழுந்தார்கள். அவளைப் பச்சாதாபமாக பார்த்தார்கள். பத்திரிகைகளைப், பிறர் படித்துக் கேட்டவர்கள், மனோகருக்கு வந்ததை அரைகுறையாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/146&oldid=1405153" இலிருந்து மீள்விக்கப்பட்டது