பக்கம்:பாலைப்புறா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

சு.சமுத்திரம்

கேள்விப்பட்டவர்கள்... இப்போது அந்த உள்ளூர் விவேகிகளிடம், முழுமையாகக் கேட்கப் போனார்கள்; உடனே அவர்களில் ஒருவர், வெற்றிலை எச்சிலையை இரண்டு விரல் இடுக்கு வழியாய் துப்பியபடியே, விவரம் சொல்லப் போனார்.

அந்த வண்டி மேற்கொண்டு ஊர்ந்தபோது, பீடிக்கடைக்குப் போவதற்காக தட்டுக்களோடு எதிர்ப்பட்ட பெண்கள், ஒருவருக்கொருவர் பேசிய வார்த்தைகளை விழுங்கினபடியே அப்படியே நின்றார்கள். அவளை, அதிசயமாய் பார்த்தபடியே நின்றார்கள். இவர்களையும் கடந்து அந்த வண்டி பள்ளிக்கூட மைதானத்திற்கு வந்த போது, கூடிக்குலவி பேசிக் கொண்டு நின்ற வாடாப்பூவின் கணவன் மாரியப்பனும், மருத்துவமனை இடத்தில் எருமை மாட்டு கொட்டகையை போட்ட அதே ராமசுப்புவும், தங்கள் தோள்களை தட்டிக் கொண்டார்கள். என்றாலும், வாடாப்பூ, எங்கிருந்தோ ஒடி வந்தாள். செருப்பு போடாத கால்கள் கல்லையும், முள்ளையும் குத்த, அந்த குத்தல் உணர்வற்று, ஒட்டப்பந்தயத்தில் ஒடுகிறவள்போல் ஒடி, அந்த வண்டியை நோக்கி ஓடினாள். ஒடியாடி வண்டியின் பின் பக்க அடைப்புக் கம்பியை பிடித்தபடியே, ‘கலை ‘கலைம்மா என் ராசாத்தி!' ‘ஒனக்கா... ஒனக்கா... ‘ என்று சொல்லி முடிக்கும் முன்பே அழுதுவிட்டாள். கலைவாணி, பழக்கப்பட்ட பாசக் குரல் கேட்டு நிமிர்ந்தாள். அந்த ஊரில், இந்த ஆறுமாத கால இடை வெளியில், முதல் முதலாய், நேருக்கு நேராய்ப் பார்க்கப்படும் முதல் தோழி இந்த வாடாப்பூதான்; இரண்டு பேரின் பார்வை பரிமாற்றத்தில் கண்கள் நீர்கொட்டின. கலைவாணி வண்டிக்கு வெளியேயும், வாடாப்பூ வண்டிக்கு உள்ளேயும் போகப் போவது மாதிரியான பாசத்தின் ஆவேசத் தாவல்... அதற்குள்

மாரியப்பன், வேக வேகமாக ஓடி வந்தான். ஒரு துள்ளலாகத் துள்ளி வந்தான். வாடாப்பூவின் கொண்டையைப் பிடித்தான். ஒரே இழுப்பாய் இழுத்து, அவள் தலையை தன் காலடியில் தூக்கிப் போட்டான். பிறகு அவளது நீண்ட நெடிய தலைமுடியை கைக்குள், கயிறுபோல் சுருட்டிப் பிடித்து, அவளை தரதரவென்று இழுத்துக் கொண்டு போனான். கலைவாணியின் கண் முன்னாலயே...

கலைவாணி, அலைமோதினாள். வண்டியில் இருந்து கீழே குதிக்கப் போவதுபோல் உடலை நகர்த்தினாள். அப்புறம் அடங்கிப் போனாள். இப்போது, தான் பழைய கலைவாணி இல்லை என்பதைப் புரிந்து கொண்டாள். இதற்குள், எவர் மாரியப்பனைத் துண்டிவிட்டிருப்பாரோ, அந்த ராமசுப்புவே, மாரியப்பன் தலையில் ஒரு தட்டுத்தட்டி, வாடாப்பூவை மீட்டார். தலை கலைந்து, ஜாக்கெட்கிழிந்து, ஆடை நழுவி, அலங்கோலமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/147&oldid=1405154" இலிருந்து மீள்விக்கப்பட்டது