பக்கம்:பாலைப்புறா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 பாலைப்புறா

சொல்லுங்க.. வேண்டாங்கல... ஆனால் தூர நின்னே பேசுங்க... ஒட்டுவாரொட்டி நோயாளி. பாவம் அவள் குணத்துக்கு இப்படி வரப்படாது. ஆனால் வந்திட்டே...”

“என்னம்மா அநியாயம் இது... புருஷனுக்கு வந்துட்டா பெண்டாட்டிக்கு வந்திடுமாமே. ஜாதகப் பொருத்தத்தைவிட சரியான பொருத்தமாய் இருக்கே"...

‘கலிமுத்திட்டுனு.அர்த்தம். ஏய் இந்திரா. வெளியிலே வா...பாவிப்பய நோயி படாத பாடு படுத்துமாமே... பேப்பர்ல எவ்வளவு விவரமா போட்டிருக்கான் பாரும்... இந்த மாதிரி ஒரு ஒட்டுவாரொட்டி நோய் எதுவுமே கிடையாதாம்...’

‘ஏழா குழலாமொழி... ஒன் நாத்தனார... தனி ரூம்ல வையுங்க. தனித்தட்டுல தனிச் சாப்பாடாய் போடுங்க... பாவம் இந்தக் கலைவாணிய மாதிரி இனிமேதான் ஒருத்தி பிறக்கணும்’

வெளியில் அடிபட்டப் பேச்சு, கலைவாணி காதிலும் விழுந்திருக்க வேண்டும், கனகம்மாவையும், தேனம்மாவையும் விட்டு சிறிது விலகி உட்கார்ந்தாள். சொந்த வீட்டு முற்றத்திலேயே இப்படி ஊர் பேச்சு அடிபட்டால், இன்னும் என்னவெல்லாம் பேசப்படுமோ என்ற அச்சம். இப்படிப்பட்ட ஊரில் எப்படி இருக்கப் போகிறோமோ என்ற கவலை. பேசாமல், மெட்ராசில் இருந்திருக்கலாமோ... அய்யய்யோ... புறப்படும் போது நடந்ததை நினைக்கவே வெறுப்பா இருக்கே. எந்த மாதர் சங்கத்தை அவள் துவக்கினாளோ, அந்த மாதர் சங்கமே அவளை எப்படி வெளியேற்றுவது என்று கூட்டம் கூட்டி ஆலோசித்த கொடுமை... கூட்டம் நடந்த இடத்திற்கு முன்னால் இவள் நின்றபோது, ஒருத்தி வாயில் கூட "ஏன் போகிறே” என்ற வார்த்தை வரவில்லை. தீர்மானம் போடாமலே நோக்கம் நிறைவேறிய பூரிப்பு கூட இருக்கலாம். இல்லையானால், அவள்களிடம் முறையிட்ட மீனாட்சியை, அப்படி பாமா மாமி விரட்டியிருக்க மாட்டாள்... 'உன் வேலைய பாரேண்டி... உனக்கு என்ன தெரியும்...? தாய் வீட்டுக்குத் தானே போறாள். ஒனக்கு என்ன வந்துட்டு...’

கலைவாணி, உதட்டைக் கடித்தாள். சாவதற்காக கடலைத் தேடியோ, ரயிலைத் தேடியோ போனாலும், அவற்றையும் தாய் வீடாக கருதுகிறவள்கள். இவர்கள் இருக்கும் இடம், எய்ட்ஸ் இருக்கும் இடத்தை விடக் கொடிய இடம். வாடாப்பூ, கனகம்மா, தேனம்மா கால்தூசிக்குக் கூட பெறாதவள்கள். இவள்கள் இருக்கும் திசையில் கோவில் இருந்தால்கூட போகக் கூடாது...

ஊர்க்காரர்கள், சன்னஞ்சன்னமாயாய் குறைந்துவிட்டார்கள். தேனம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/150&oldid=1405157" இலிருந்து மீள்விக்கப்பட்டது