பக்கம்:பாலைப்புறா.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 153

கொழுந்தன் பெண்டாட்டிகளோடும், அந்த வீட்டைப் படையெடுக்கப் போவதுபோல் பார்த்துப் போர்க் குரலிட்டாள்.

“என் மகன்.... நான்... உள்ளங்கையிலே சோறு பொங்கிப்போட்ட என் செல்ல மகன், எவள் கிட்ட எல்லாமோ போய்... எந்த நோயையோ வாங்கிட்டு வந்ததான்னு, எவளோ, எவனோ சொன்னாளாமே... வாங்கடா வெளில... வாங்கடி. வெளியில... பெத்தவளுக்குத் தெரியாத பிள்ள அருமை... இவளுவளுக்குத் தெரியுமா... என்ன நெனைச்சாளுவ இன்னிக்கி என்பிள்ளையப்பற்றி சொன்னதை ருசிப்பிக்கணும்”.

சீனியம்மாவுக்கு, தெருச்சண்டை பழக்கமில்லை. இதில் பேரும் புகழும் பெற்ற தவசிமுத்து வீட்டில், இதற்காகவே கலைவாணியைக் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டவள்... இப்போது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள். இது, சீதாலட்சுமிக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. யாராவது பிடிக்கப் பிடிக்கத்தான், அவளுக்கு ஆவேசம் வரும். அவள் மகள் மீரா, அம்மாவைப் பிடித்தாள். விவேகானந்தர் மாதிரிகையைக் கட்டிக் கொண்டு நின்ற பலராமனிடம், தான் ஒரு குடும்பப் பாங்கான பெண் என்பதைக் காட்டிக் கொள்வது போல், “எம்மா... எம்மா" என்று சொல்லி, முகத்தை சுழித்தபடியே பிடித்தாள். ஆனால், அந்த அம்மாவோ, சுற்றி நின்ற கூட்டத்திடம் முறையிடுவது போல் கத்தினாள்.

‘குனிஞ்சதல.. நிமிராமல் நடக்கிறவன் என்மகன். வாய் அதிர்ந்து கூட பேசாத பிள்ளை என் பிள்ளை. அப்படிப்பட்ட என் ராசாதி ராசா, இப்போ சீரழிஞ்சு சின்னாபின்னமாகி.. லோலுபட்டு கிடக்கான். நானும் ரெண்டு நாளாய் உண்ணாமத் தின்னாமக் கிடக்கேன். இந்த வீட்ல என்னடான்னா... என் மகன், எவள்கிட்ட எல்லாமோபோனதா பேசுறாங்களாம். இவங்க என்னமோ லைட்டு பிடிச்சது மாதிரி... கட்டுன புருஷன அனாதரவாவிட்டுட்டு வந்திருக்கிற ஒடுகாலிய சத்தம் போட்டு திருப்பி அனுப்புறதுக்கு வக்கில்ல... வகையில்...துப்பில்ல... தொகை இல்ல... பேசுறாவளாம் பேச்சு’.

சீனியம்மாவால், பொறுக்க முடியவில்லை... வாசல் தாண்டாமலே கேட்டாள்.

"ஏன் பேசமாட்டோம்... உடம்பிலே ஆயிரத்தெட்டு நோய வாங்கிட்டு, என் பொண்ணக்கெடுத்த கல்நெஞ்சுக்காரனை ஏன் பேசமாட்டோம்?... என் மகளை சீரழிக்கனுமுன்னே பிறந்திருக்கான் பாரு...”

‘ஒன் மகள்தான் என் மகனக் கெடுக்கன்னே பிறந்திருக்காள். எந்த நேரத்தில நான்தவம் பெத்த மகன் கையப் புடிச்சாளோ, நான் பெத்த பிள்ளை நடுத்தெருவிலே நிக்கான்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/153&oldid=1405165" இலிருந்து மீள்விக்கப்பட்டது