பக்கம்:பாலைப்புறா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 பாலைப்புறா

ஆமா... பெரிய அரிச்சந்திரன். பொம்புள நோய வாங்கிறவன் ஒரு மனுஷனா... அவன் சீரழிஞ்சாஅது அவன்புத்தி. ஆனால் என்மகளை எதுக்கு சீரழிக்கணும்...”

“ஒன் மகளோட புத்தி ஊருக்கு நல்லாவே தெரியும்... அவளாலதான் என்பிள்ளை சீரழியுறான்".

பலராமன், இப்போது போர்க்குரல் கொடுத்தான்...

"எத்தே... இதுக்கு மேல பேசினே... அப்புறம் பேசுறதுக்கு வாய் இருக்காது. ஒன் மகன் யோக்கியததான் பேப்பர் பேப்பரா கிழியுதே... பேச வந்துட்டாள் பெரிசா”.

தம்பிக்கு கோபம் வந்தால், அது விஷ்ணு சக்கரம் மாதிரி இலக்கைத் தாக்காமல் திரும்பாது என்பதைப் புரிந்து கொண்ட கலைவாணி, வெளியே வந்தாள். அம்மாவின் முதுகுக்குப் பக்கமாய் நின்று கொண்டாள். அவளைப் பார்த்தவுடனேயே, சீதாலட்சுமிக்கு பற்றிக் கொண்டு வந்தது. பிரும்மாஸ்திரத்தை விட்டாள்.

‘இவள் மட்டும் யோக்கியமோ... சொல்லச் சொல்லு. பொம்பளை நோயின்னு சொல்றியளே... அந்த பொம்பள, ஒன் மகளா ஏன் இருக்கப்படாது? அந்தச் சங்கம் இந்தச் சங்கமுன்னு எத்தனை பேர் கிட்ட பல்லைக்காட்டி இருக்காள். எத்தனை ராத்திரி நாடகம் கூத்துன்னு வீட்டுக்கு வராமல் வெளியிலே தங்கி இருக்காள்... என் அப்பாவிமகனுக்கு அந்த நோயக்கொடுத்தது இவள்தான். இந்த முண்டக் கண்ணிதான்...’

பலராமன், சீதாலட்சுமியின் முடியைப் பிடிக்கப் பாய்ந்தான். அப்படிப் பாய்ந்தவனை, தவசிமுத்து, காலைப் பிடித்து இழுத்தார். அந்த தவசிமுத்துவை, கமலநாதன் கழுத்தைப் பிடித்து இறுக்கினான். மீராவும், குழல்வாய் மொழியும் கைகளைப் பிசைந்தார்கள். சுப்பையா, கலைவாணியைக் கட்டிப் பிடித்து, குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டார். உள்ளுர் விவேகிகள், ஆளுக்குள் ஆள் சத்தம் போட்டு அதட்டினார்கள்.

கலைவாணி காதுகளைப் பொத்திக் கொண்டு, மனதைத் திறந்து கேட்டாள்.

‘இந்தப் பழியையும், இந்த நோயையும் சுமந்துக்கிட்டு, இன்னும் உயிரோட வாழணுமா...? ஊர் பக்கம் கிணறு இருக்கு, வீட்ல கயிறு இருக்கு, எனக்கும் மானம் இருக்கு’...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/154&oldid=1405166" இலிருந்து மீள்விக்கப்பட்டது