பக்கம்:பாலைப்புறா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

17

மனோகர் வெளியுலகைப் பார்க்க விரும்பாதவன் போல், உள் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

முட்டிக்கால்களை வயிற்றுக்குள் முட்டிக் கொண்டு, போர்வைக்குள் முடங்கிக் கிடந்தான். அந்த வெயிலிலும், உடல் முழுவதையும் கம்பளிப் போர்வை மறைத்து இருந்தது. கட்டிலில் மூட்டை முடிச்சு கிடப்பது போலவே கிடந்தான். எல்லாம் செத்து, தான் மட்டுமே குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பது போன்ற விரக்தி... முந்தா நாள்வரை, தன்னுள் புகுந்த கிருமிகள், உடனடியாய் தன்னை எய்ட்ஸ் நோயாளியாக்கி, பூமிக்கு கீழேயோ அல்லது நெருப்பு மூலமாகவோ கணக்கு தீர்க்க வேண்டும் என்று துடியாய், துடித்தவன், இப்போது தவியாய்த்தவித்தான். அந்தக் கிருமிகள், இந்த நேரம் எய்ட்ஸ் அவதாரம் எடுத்திருக்கலாம் என்ற பீதி, அதற்கு ஏற்றாற்போல், கையில் ஒரு சின்னக் கட்டி... உடலெங்கும் அரிப்பு... எழ முடியாத உடல்வலி. உமிழ் நீரே விக்கிக் கொள்வது மாதிரியான வாயடைப்பு... தொண்டையில் கதவடைப்பு...

வீட்டைக் கூட்டிப் பெருக்கிவிட்டு, தரையை ஈரத்துணியால் துடைத்து விட்டு, வேலைக்காரச் சிறுமி மீனாட்சி, கீழே சுவர் மூலையில் உட்கார்ந்தபடி, அந்தக் கட்டிலையே ஏறிட்டுப் பார்த்தாள். நேற்றிரவு, அவனுக்காக வாங்கி வந்த இட்லி பொட்டலம், காகிதச் சணல் கட்டில் இருந்து விடுதலையாகாமல் கிடந்தது. நான்கைந்து நாட்களாக, அவள்வாங்கி வந்து கொடுப்பதை, அவன் அரைகுறையாய் தின்பதும், பின்னர் அப்படியே முடங்கிக் கொள்வதுமாய் கிடக்கிறான். வாழ்க்கையில் ஒரு பகுதியான தூக்கத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்டவனை, சாப்பிடும்படி ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/155&oldid=1405167" இலிருந்து மீள்விக்கப்பட்டது