பக்கம்:பாலைப்புறா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 பாலைப்புறா

அதட்டல் போடலாமா என்று மீனாட்சி யோசித்தபோது, ஒரு காலடிச் சத்தம்...

தவசிமுத்து, ஒரு தூக்குப் பையோடு உள்ளே வந்தார். கட்டிலில், போர்வைக்குள் காணாமல் போனவனை, பாம்பை, கீரி பார்ப்பது போல் முகத்தை நீட்டி நீட்டிப் பார்த்தார். பிறகு ‘எப்பா... எப்பா' என்றார். போர்வைக்குள் ஒரு சின்ன சலனம் கூட இல்லை. ஒப்பா வந்திருக்கேண்டா, ஒப்பாடா என்றார். அதற்குள் அசைவு இல்லை... இதனால், அந்த வேலைக்காரச் சிறுமிக்கு ஆணையிட்டார்.

‘அவனை எழுப்பும்மா... ஒன்னத்தான்... ஏன் பித்து பிடிச்சுகிடக்கே. போர்வையை எடு. அவனை எழுப்பு’.

மீனாட்சி, வெறுமனே கைகளைப் பிசைந்தபோது, மனோகர் போர்வையை ஆவேசமாக வீசிக்கடாசிவிட்டு, எழுந்து உட்கார்ந்தான். எரிச்சலோடு கேட்டான்.

"என்ன விஷயம்?”

‘அறு நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மெனக்கெட்டு வீடு தேடி வந்திருக்கிற பெத்த அப்பனப் பார்த்து கேட்கிற கேள்வியாடா இது..?’

மனோகர், தந்தையின் பார்வையை தவிர்த்து, தனக்குள்ளேயே, பொருமினான். அப்பா வருவார் என்று ஆவலோடு காத்திருந்தவன்தான். அம்மாவைக்கூட்டி வந்தால் செலவாகும் என்பதாலும், அதோடு அவள் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பாள் என்பதாலும், அப்பா, அவளைக் கூட்டி வரமாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால், எதிர்பார்த்ததுபோல் வந்த அப்பா, எதிர்பாராதது போல் நடந்ததுதான் அவனுக்கு புரியவில்லை; இந்தப்பா, தன்னைக் கட்டிபிடித்துக் கலங்கவில்லை. அய்யோ என் மகனே என்று அலறவில்லை. எப்படிடா இருக்கே என்று கட்டிலில் வந்து அமரவில்லை. மீனாட்சியை விட்டு எழுப்பச் சொல்கிறார். அந்தக் குரலில் கூட ஒரு நெகிழ்ச்சி இல்லை. கடன்காரனிடம் வட்டி கேட்கும் போது, எந்தக் குரல் மேலோங்குமோ அந்தக் குரல்... எந்தக் கைகள், தன்னைத் தொட்டுத் தூக்கி தோளில் வைத்திருக்குமோ, அந்தக் கைகள், அவனைத் தொடக் கூட வேண்டாம்... அவன்போர்வையைக் கூடத் தொடமறுக்கின்றன.

தவசிமுத்துதான் வலியப் பேசினார்.

‘எப்படிடா... இருக்கே? எல்லாம் தலையெழுத்து. வீட்டுல எல்லோருமே கதிகலங்கிட்டோம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/156&oldid=1405168" இலிருந்து மீள்விக்கப்பட்டது