பக்கம்:பாலைப்புறா.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 157

மனோகர், நெகிழ்ந்து போனான். ஆயிரம் இருந்தாலும், அவர் அவனுடைய அப்பா. தான் ஆடவில்லையானாலும், சதையாடிப் போகும் அப்பா... இப்படி கடுமையாய் பேசியிருக்கப்படாது.

‘உக்காருங்க அப்பா... மீனாட்சி. தாத்தாவுக்கு வெந்நீர் போடும்மா.’

மீனாட்சி எழுந்தாள். தகப்பனையும், மகனையும் அதிசயமாய் பார்த்தபடி. அதே சமயம் கலைவாணியையும் நினைத்துப் பார்த்தபடி எழுந்தாள். அந்தக் கிழவன், முன்னால், ஒரு தடவை வந்திருக்கும் போது, அக்கா, இதோட கையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். ‘இனிமேல் நீங்க வருவதை முன் கூட்டியே லட்டர்லே தெரிவியுங்க... நானும், இவரும் ஸ்டேஷனுக்கு வந்திடுவோம். ஆட்டோவிலே வர வேண்டியதுதானே மாமா... இப்படியா கஷ்டப்பட்டு பஸ்ல வர்ரது...’ என்று சொன்ன அக்கா, கஷ்டப்பட்டுப் போய்விட்டாள். அப்போக்கூட இந்த பெரிய மனுஷன், வேணுமுன்னா... அதுக்குள்ள பணத்தைக் கொடுத்துடேனு டமாஷ் செய்தது. டமாஷா இல்ல. கொடுத்தால் வாங்கி, ஜேப்பில போட்டுக்கும். பொல்லாதது”.

மீனாட்சி, சிந்தனையை உதறியபடி, சமையலறைக்குள் போகப் போனபோது, தவசிமுத்து அவளைக் கையமர்த்தி தடுத்துவிட்டு, ஆறுதல் தேடிப் பார்த்த மகனிடம் சால்ஜாப்பாய் பேசினார்.

"ஊர்ல இருந்து ராமசுப்போட வந்தேன். அவன் மகன் வண்ணாரப் பேட்டையில சீயக்காய் வியாபாரம் பார்க்கான் பாரு, அவனப் பார்க்க சுப்பு என்னோட வந்தான். அப்பன ஸ்டேஷன்லே பார்க்க வந்த மகன், இன்னிக்கி ஒரு நாளாவது அவன் வீட்டுல நான் இருக்கணுமுன்னு வம்பு பண்ணிட்டான். நான் கையோட கொண்டு வந்த டிரங்க் பெட்டியையும் பலவந்தமாய் பிடுங்கிக்கிட்டான். நான்தான் ஒன்னை ஒரு எட்டு பார்த்துட்டு வாறேன்னு கெஞ்சுனேன்...”

மனோகருக்கு, ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அது தட்டுப்பட தட்டுப்பட, தவசிமுத்து ஒரு சூரிய நாராயணனாக, ஒரு நாராயணசாமியாக உருமாறிக் கொண்டு இருந்தார். அவர்களைப் போல், இவருக்கும் மரண பயம்; அது வந்துவிட்டால், மனிதன் குழந்தையாவான், அல்லது மிருகமாவான். மரணத்திற்குப் பயப்படலாம்... ஆனால், மரண விளிம்பில் நிற்கும் ஒரு மனிதனிடமா பயப்பட வேண்டும்? அதுவும் அந்த மனிதன் மகனாக இருந்தாலும். இவரிடம் பேசிப்பயனில்லைதான்.

தவசிமுத்து, மெளனம் கலைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/157&oldid=1405169" இலிருந்து மீள்விக்கப்பட்டது