பக்கம்:பாலைப்புறா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 பாலைப்புறா

பெயரு. ரொம்ப பெரிசு. மருத்துவமனை என்கிறது ரொம்ப சிறிசா போட்டிருக்கு... மகளிர் மன்ற கூட்டுச் செயற்குழு என்கிற பெயரையே காணோம்’.

கலைவாணிக்கு, ரத்தம் கொதித்தது. கல்யாணத்திற்கு முன்பிருந்த பழைய கலைவாணியாய் மாறிவிட்டாள். அதைப் பேச்சிலும் காட்டினாள்.

‘எந்த நிறுவனமும், தனி ஒருத்தரைவிட பெரியது. நீங்க அவளை இந்த அளவுக்கு விட்டிருக்கப்படாது’.

“நாங்க எங்கே விட்டோம். அவளே எடுத்துக்கிட்டாள். இன்னிக்கி நடக்கப் போற திறப்பு விழா சம்பந்தமாய் கூட்டுக்குழு கூட்டத்தை நடத்தல.. கேட்டால், வந்தால் வாங்கடி, வராட்டால் போங்கடி என்கிறாள்!”

‘இது அநியாயம்... நீங்களாவது குழுக் கூட்டத்தை கூட்டியிருக்கணும்’.

"நானும் சொன்னேன்... ஆனால் நீ போன பிறகு, எல்லாரும் பயப்படுறாளுக... கட்சிக்காரன் பொன்னய்யாவை கைக்குள்ளே போட்டிருக்காள். இவளே அந்த கட்சியின் மகளிர் அணி செயலாளராய் ஆகப் போறாளாம். எஸ்.பி.யை விழாவுக்கு கூப்பிடப் போனதால, போலீஸ்காரன், அவளுக்கு சப்-இன்ஸ்பெக்டருக்கு அடிக்காத சலூட்டா அடிக்கான். கலெக்டரை கூப்பிட்டதால... தாசில்தார் பயப்படுகிறார். மாவட்ட கல்வி அதிகாரியைக் கூப்பிட்டதால... பள்ளிக்கூட மானேஜர் பயப்படுகிறார். எம்.எல்.ஏ.வைக் கூப்பிட்டதால, எல்லாருமே அவள்கிட்ட பயப்படுறாங்க. இந்த ஆறு மாசத்தில மகளிர் மன்றம் பெயர்லே எல்லாரையும் கைக்குள்ளேயே போட்டுக்கிட்டாள். இனிமேல் சாராயம் காய்ச்ச வேண்டியதுதான் பாக்கி”

“எப்படியோ ஒழியட்டும்... ஒனக்கு ஒரு அழைப்பிதழையாவது கொடுத்து இருக்கலாம்..."

“அது பிரசவ மருத்துவமனை. எய்ட்ஸ் மருத்துவமனையாய் இருந்தால் எனக்குக் கொடுத்திருப்பாள்... சரி... நீங்க விழாவுக்குப் போகலியா!’

"நீ இல்லாத இடத்தில எங்களுக்கு என்ன வேலை” "அப்படிச் சொல்லப்படாது. இப்படி போராட வேண்டியவங்க ஒதுங்குவதாலதான், ஒரு பொது நிறுவனத்தை, தனிப்பட்ட ஒருத்தியோ இல்ல ஒருத்தனோ ஆட்டிப் படைப்பாங்க. இது. அவங்க திறமையைக் காட்டல. நம்மோட கோழைத்தனத்தைதான் காட்டுது".

"நீ என்ன சொல்லுதே கலை".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/168&oldid=1405205" இலிருந்து மீள்விக்கப்பட்டது