பக்கம்:பாலைப்புறா.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

சு. சமுத்திரம்

"விழாவிலே கலந்துக்கங்க... முன் வரிசையிலே உக்காருங்க. குழு உறுப்பினர்களுல யாரையாவது ஒருத்தியை கூட்டத்தில பேச வையுங்க. மைக்குக்கு முன்னால போய் நின்னுட்டால், யாரும் தடுக்க முடியாது. இந்த மருத்துவமனை கொண்டு வர, நாம பட்ட பாட்டை சொல்லச் சொல்லுங்க”.

‘இப்போ... சொல்லிட்டல்லா...இனிமே பாரு’.

வாடாப்பூவும் தேனம்மாவும் போர்க்குணத்தோடு புறப்பட்டார்கள். லாரி டிரைவர் மாரியப்பன் டூர் போய்விட்டதால், வாடாப்பூவிற்கு அசுர பலம்... அதைப் பார்த்த தேனம்மாவுக்கு, புலிப்பலம். இவர்களை பலப்படுத்திய தோழி கலைவாணியோ, அவர்கள் போனதும் பலவீனப்பட்டாள். இடைக்காலமாய் மனதில் இருந்து மறைந்த மனோகரும், எய்ட்ஸும், மாமியாரின் ஏச்சும், குமாரவேலுக்கு வீட்டில் கிடைத்த அவமரியாதையும் அவளை குத்திக் குடைந்தன... அம்மா சொன்னது நிசந்தான். இப்போது மட்டும் வெளியே போகவில்லையானால், பைத்தியம் பிடிக்கும். சந்திரா, மனோகர் ஆகியோரிடம் எப்படி நடந்து கொண்டாளோ அப்படி நடக்க வேண்டியது ஏற்படலாம்.

கலைவாணி, வீட்டில் இருந்து வெளியேறி, கடைத் தெருப்பக்கம் வந்து விட்டாள். இடையிடையே தேநீர் கடைகளைக் கொண்ட இடைவெளி இல்லாத தெரு. அந்தக் காலத்திலேயே துவக்கப்பட்டதால், இந்தக் காலத்திலும், பெரிய கடை என்று பேசப்படும், ஒரு சின்ன மளிகைக் கடை; சாக்கு சாக்காக அடுக்கி வைக்கப்பட்ட அரிசிக் கடை, ஒரு பள்ளத்தில் கிடந்த கசாப்புக்கடை, சிறிது தள்ளி ஒரு வெறுங்கடை, அதில் வீடியோ ஆடியோ கேசட்டுக்களை விற்கலாமா அல்லது பேன்சிக்கடையை வைக்கலாமா என்று இன்னும் முடிவெடுக்காமல், முண்டமாய் கிடக்கும் கடை. இவற்றைத் தாண்டினால், அந்த விவசாயக் கிராமத்திலும் விற்பனைக்கு தரையில் வைக்கப்பட்ட காய்கறி மொந்தை. கூறு கூறாய் வைக்கப்பட்ட கருவாட்டு அடுக்குகள். இவற்றிற்கு முன்னாலும், பின்னாலும், இடை இடையேயும் நின்ற ஆண், பெண், குழந்தைகள். இத்தனை பேரையும், அத்தனைக் கடைகளையும் தாண்டி கலைவாணி நடந்து கொண்டே இருந்தாள். முன்பு போல், அவளை யாரும் மொய்க்கவில்லை. பக்கத்திலேயே வளையல்கடை ‘எந்த வளையல் நல்லா இருக்கும் கலை' என்ற வழக்கமான கேள்வி இல்லை. ஆனாலும், அவர்கள் நல்லவர்கள். வேறு ஒருத்தியாக இருந்தால், இந்நேரம் ஓடியிருப்பார்கள்... இல்லையானால் அவளை ஓட்டி இருப்பார்கள். கண்ணுக்கும் கருத்துக்கும் பிடித்த கலைவாணி என்பதால், அவளைப் பார்த்தபடி நிற்பதே, ஒரு சலுகை என்பதுபோல் நின்றார்கள். ஆனாலும் ஒரு சிலர் எப்படி தாயி இருக்கே என்று அருகே வந்து கேட்கத்தான் செய்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/169&oldid=1405206" இலிருந்து மீள்விக்கப்பட்டது