பக்கம்:பாலைப்புறா.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலைப்புறா

170

கலைவாணி, ஒரு நோயாளிப் புன்னகையோடு, சாலைப்பக்கம் வந்தாள். நடந்து நடந்து, பழைய புறம் போக்கு இடத்தில் எல்லையான கப்பிச்சாலைக்கு வந்தாள். பக்கத்திலேயே தோரணவாயில்... அதன் முன்னாலும், பின்னாலும் வரவேற்பு பேனர்கள். தொலைவாய் உள்ள அலங்காரமான மேடையில் அறிவொளி பாட்டுக்கள். தோரணவாயிலில் ஒரு பக்கம், பன்னீர்செம்போடு ஆனந்தி; அவளுக்குப் பின்பக்கத்தில் நான்கைந்து பெண்கள்... மறு பக்கம் அதே ராமசுப்பு; அவரைச் சுற்றி உள்ளூர் விவேகிகள். இரு பக்கத்திற்கும் இடையே மேளக்காரர்கள். கலெக்டர் வந்ததும், வெளுத்துக்கட்ட வேண்டும் என்பது கட்டளை...

கலைவாணி, அந்த விழா மேடையை, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மாதிரி பார்த்தாள், பெருமிதமாய், தாய்மைப் பெருக்கோடு பார்த்தாள். அந்த தியாகிகளைப் போலவே, இவளையும், யாரும் கண்டுக்கவில்லை. ராமசுப்பு மட்டும், அவளை கண்களால் வழி மறித்துப் பார்த்தார். ஆனந்தி, அக்கம் பக்கம் நின்ற சொந்தக்காரப்பெண்களிடம் கிசுகிசுத்துவிட்டு, அப்போதுதான் அவசரமான வேலை இருப்பதுபோல், மேடைப்பக்கம் ஒடினாள். அந்த மேடையில் வாடாப்பூவுக்கும், தேனம்மாவுக்கும், கனகம்மாவுக்கும் என்ன வேலை...? அவர்களை இறக்கியாக வேண்டும்.

கலைவாணி, பழக்க தோஷத்தில் லேசாய் நின்று பார்த்தாள். எவராவது ஒப்புக்கு கையாட்டி இருந்தால் கூட போயிருப்பாள். மேடையில் உலாவந்த வாடாப்பூவோ, கனகம்மாவோ, இவளைக் கவனிக்கவில்லை; ஆனந்தியிடம், ஆவேசமாக வாயடித்துக் கொண்டிருந்தார்கள்.

கலைவாணி நடையைத் தொடர்ந்தாள். எல்லாம் நல்லபடியாக நடந்து இருந்தால், ஒரு வேளை டவுனுக்குப் போகாமல், இவளே இங்கே பிள்ளை பெற்று இருக்கலாம். பிள்ளை என்று மனம் நினைத்ததும், அவள் அடிவயிறு எரிந்தது. தலை சுற்றியது. மசக்கையா அல்லது தாங்கொண்ணா தாபமா என்பது அவளுக்கே புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. வயிற்றில் வளரும் குழந்தை வாழப் போவதில்லை. எய்ட்ஸ் முத்திரையோடு பிறந்து, ஓரிரு வருடங்களில் அடங்கப் போகிற ஜீவன். அதையும் உலகில் உலாவவிட்டு, அவஸ்தைப்பட வைக்கலாகாது. முழு உருவம்பெறும் முன்பே, அதை முடித்தாக வேண்டும்... எங்கே எப்படி?

கலைவாணி சிந்தித்தபடியே, முருகன் கோவில் வளாகத்திற்குள் வந்து விட்டாள். இந்த மருத்துவமனை பிரசவிக்கும் இடத்திற்கும், சிறிது தொலைவாய் உள்ள சவுக்குத் தோப்பிற்கும் இடையே உள்ள இடம்... கோவில் முன்னாலேயே, பழைய காலத்து மண்டபம் கற்சிதைவுகளாய் நின்றது. ஆனால் உள்ளே அருமையான கோவில்... பெரிய கொடிக்கம்பம். பிரகாரச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/170&oldid=1405207" இலிருந்து மீள்விக்கப்பட்டது