பக்கம்:பாலைப்புறா.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 171

சுற்றுக்கள்.

கருவறையில் வேல்முருகன், வள்ளி தெய்வானை இல்லாத பாலமுருகன்... பால் வடியும் முகம். வேல்கொண்ட ஒரு வீரக்கரம்... அபயமளிக்கும் மறுகரம். ‘யாமிருக்க பயமேன்’ என்ற வாசகமில்லாத பார்வை.

அந்த முருகச்சிலையோடு ஒன்றிப் போனதால், கலைவாணி தன்னைப் பார்த்ததும், அளிப்பாய்த்த கம்பிகளுக்கு இருபுறமும் நின்ற பெண்கள், ஒரு பக்கமாய் ஒடிப் போய் நின்றதைக் கவனிக்கவில்லை. முன்பெல்லாம் இதே இந்தக் கோவிலுக்கு விளையாட்டாக வந்திருக்கிறாள். அக்கம் பக்கம் பேசியபடியே, அவ்வப்போது முருகனையும் பார்த்திருக்கிறாள். அந்த முருகனை வியந்ததும் இல்லை, பழித்ததும் இல்லை... ஒரு தடவை, ஒரு உபன்யாசி, முருகன் பிரும்மாவை சிறையிலடைத்தது பற்றி சொற்பொழிவாற்றியபோது, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த இதே கலைவாணி, ‘அப்போ முருகன். சஞ்சய் காந்தியா’ என்று கூட கிண்டலடித்திருக்கிறாள். ஆனால், இப்போதோ அந்த கற்சிலைக்குள் ஒரு ஆன்ம ஒளி வேரூன்றி, பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருப்பது போன்ற சிந்தனை... அந்த ஒற்றை முருகன், தனக்காக காத்திருப்பது போன்ற அனுமானம்; அவன் கழுத்தில், தான் ஒரு உருத்திராட்ச மாலையாய் மாறிப் போனது போன்ற பிரமை... அவனை பிறப்பறுக்கும் பெருமானாய், முதன்முதலாய் உணர்ந்தது போன்ற ஆரம்ப ஞானம்... பிறப்பறுக்க வேண்டுமானால், இறப்பை எதிர்பார்க்கவேண்டும் என்ற தெளிவு... இந்த தெய்வச்சிலை, இவள் பூமியில் விழுவதற்கு முன்பே எழுந்து, பூமிக்குள் போனபிறகும் தொடர்ந்து நிற்க போவதை அறிந்த ஆன்ம விழிப்பு... ‘வேல் வேல்... வெற்றிவேல்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். லெளகீக கணக்குகளுக்கு, எக்ஸ் ஒய் என்று வைப்பதுபோல், ஞானக் கணக்குக்கு இந்த வேலும் மயிலும் எக்சானவை... ஒய்யானவை என்று பறைசாற்றும் பகுத்தறிவு... இவற்றைப் பிடித்தே இவற்றைத் தாண்டி, உள்ளொளி பிடித்து மனதை துறக்க வேண்டும் என்று எப்போதோ அலட்சியமாகப் படித்தது, இப்போது காதுக்குள், எவர் குரலிலேயோ, அசரீரி போல் ஒலித்தது. அந்த முருகச் சிலையைப் பார்த்த அவள் கண்களில் குருக்களும் தென்பட்டார்.அவர் பார்த்த பார்வை சரியில்லை... கற்பூரத்தட்டோடு வெளியே வரப் போனவர், உள்ளேயே நின்று கொண்டார். அந்தச்சிலையை அவர்கழுவுவதால், அவருக்கு அது ஒரு கல்... பக்தர்கள் தொழுவதால் அந்தச்சிலை... அவர்களுக்கு எல்லாமே...

எங்கேயோ படித்ததை நினைத்து, கலைவாணி சிரித்துக் கொண்டாள். சுவரில் எழுதப்பட்ட பாம்பன் சுவாமிகளின் முருக நாமாவளியையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/171&oldid=1405213" இலிருந்து மீள்விக்கப்பட்டது