பக்கம்:பாலைப்புறா.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலைப்புறா

172

தேவராய சுவாமிகளின் கந்தர் சஷ்டிக் கவசத்தையும் அன்றுதான் படித்தாள். அதுவரை வெறும் எழுத்துக்களாய் நின்றவை, இப்போது, அவளிடம் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தன. படித்தவற்றில் ஒரு வாசகத்தை சிக்கெனப் பிடித்துக் கொண்டு அதையே திரும்பித் திரும்பிச் சொன்னாள்... 'எல்லாம் பிணியும் என்றனைக் கண்டால், நில்லாது ஒட. நீ எனக்கு அருள்வாய்.’

கலைவாணி, பிரகாரம் சுற்றினாள். கல்லாய் நின்ற அருணகிரியும், பாம்பன் சுவாமிகளும், அவளுள் ஒளி எழுப்பும் சொல்லாய் மாறினார்கள். சிலையாய் நிற்கும் துர்க்கையின் நெற்றியில் ஒராயிரம் கோடிசூரியன்... உச்சித் திலகமாய்த் தெரிகிறது. அபிராமி பட்டர் அந்தாதியை பள்ளியில் படித்தது... பாய்ந்து, மனதுக்குள் பிரவாகமாய்ப் பெருக்கெடுத்தது. ஆறாய்ப்பாய்ந்தது.

கலைவாணி, தன்னை மறந்து, தான் கெட்டு, மனம் செத்து, ஒரு வினாடி நின்றிருப்பாள். அதற்குள் யாரோ காறித்துப்பும் சத்தம். திருப்பிப் பார்த்தாள். மாஜி மாமியார் சீதாலட்சுமி, அவளை... விழுங்கப் போகும் பூதகியாய் வாய் விரித்தாள். மீண்டும் துப்பினாள். மீண்டும்... மீண்டும்துப்பினாள்... அதுவும் கோவில் பிரகாரத்திற்குள்ளேயே அவள் துப்பியது, அவள் கை பிடித்த தேங்காய்த் தட்டிலும் தெறித்தது.

கலைவாணி, அவளை எச்சிலாய் பார்த்தபடியே, ஒதுங்கிக் கொண்டாள். நேருக்கு நேராய் கேட்பவள், ‘முருகு நீ கேட்டுக்கோ' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். தண்டனையாய்க் கேட்கவில்லை. தர்மமாய்க் கேட்கவில்லை. நியாயமாகக்கூட கேட்கவில்லை... இப்புடித்தான் என்று கேட்கவில்லை. கேள். கேள்... எப்படியோ கேள் என்பதுபோல் கேட்டாள்.

கலைவாணி, கொடிக்கம்பத்திற்கு அருகே உள்ள புல்தரையில் உட்கார்ந்தாள். அங்கேயும் சீதாலட்சுமி அவளை விடவில்லை. இப்போது சாடைமாடையாகத் திட்டினாள். காறிக் காறித் துப்பினாள். ஆனாலும் கலைவாணிக்கு ஒரு சிரிப்பு. தற்குறி கிடக்கிறாள் என்பது மாதிரியான சிரிப்பு... முருகன், தன் பொறுமையை அளந்து பார்க்கிறான் என்ற அனுமானம்... எல்லாம் அவன் என்றால்... இவளும், அவளும், அவன்தானே...?

கலைவாணி எழுந்தாள்; இன்னும் மஞ்சள் வெயில் அடிக்கத்தான் செய்கிறது. ஆனால், பலராமன் வந்துவிட்டான். சீதாலட்சுமி எச்சிலை விட்டாள்; இல்லையானால் இவன் அவளை வாயில் நுரை கக்கும்படியாய்ச் செய்துவிடுவான்.

கலைவாணி, தம்பியோடு அவசரமாய்ப் புறப்பட்டாள். ஒருத்தருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/172&oldid=1405214" இலிருந்து மீள்விக்கப்பட்டது