பக்கம்:பாலைப்புறா.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

175

சு. சமுத்திரம்

வளைந்த மனிதர்; தகரம் போலான உடம்பு... இவருக்கு இப்படி ஒரு அழகான பெண் எப்படிப் பிறந்தாளோ என்று ஊர் பேசும் மனிதர்; வீராப்பாகவே இருந்தார். இதற்குள் சமையலறையில் இருந்து அடுப்புக் கரித்தலையோடு உள்ளே வந்த சீனியம்மா, அவரிடம் முறையிட்டாள்.

“எங்களுக்கு... வந்திருக்கிற கொடுமையைப் பாத்திங்களாஅண்ணாச்சி! ஒங்கள மாமான்னு வாய் நிறையக் கூப்பிடுற ஒங்க மருமகளைத் தேடி வந்த அக்கிரமத்தைப் பாத்தீங்களா அண்ணாச்சி".

ஆறுமுக நயினார், அப்படியும் அசையவில்லை. அப்போது பார்த்து கலைவாணி, ஒரு தட்டில் மோர் ததும்பும் டம்ளரைக் கொண்டு வந்தாள். அந்த டம்ளரைக் கையால் தூக்கி, மாமாவிடம் நீட்டினாள். உடனே அந்த மாமாவான ஆறுமுக நயினார், சற்று தொலைவாய் உள்ள இன்னொரு நாற்காலியில் போய் உட்கார்ந்தபடியே, முதல் முறையாக வாயைத் திறந்தார். ‘நீயெல்லாம், காபி... மோர்ன்னு கொண்டு வரப்படாதும்மா... சாதம் கூடப் பரிமாறப்படாது... ஏன்னா... நோய் அப்படிப்பட்ட நோய்.’

மாமா, தான் ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை, அப்படிச் சொல்வதாக நினைத்த கலைவாணி, அவரை நன்றியோடு பார்த்துக் கொண்டு, அவரை நோக்கி நடந்தாள். அவர், இப்போது சிறிது கோபப்பட்டே பேசினார்.

"ஒட்டுவார் ஒட்டி நோய்க்காரி, இப்படி எதையும் கொடுக்கப் படாதும்மா. படிச்சபொண்ணுக்கு இதுகூடவா தெரியல?”

கலைவாணி, காதுகளை உள்முகமாய் அடைத்துக் கொள்வதுபோல், மூச்சை நிறுத்தினாள். பிறகு, தட்டையும் மோரையும் முற்றத்தில் வைத்துவிட்டு, தனது அறைக்குள் ஒடிப் போனாள். ‘எங்க ஊரையும் வந்து திருத்தும்மா... எல்லாப் பயல்களும், பயமகன்களும், கழுத களவாணிப்பய பிள்ளைகளாயிட்டு' என்று முன்பு பல தடவை சொல்லி இருக்கும் இந்த மாமா... இப்போது ஒரு கழுதையைவிடக் கேவலமாய் தன்னை கருதுவதைக் கண்டு, அவள் அந்த அறையில் மூலையில் சாய்ந்தாள். அம்மாக்காரியும் சம்பந்தியைச் சுட்டெரிப்பது போல் பார்த்துவிட்டு, மகள் மருவும் அறைக்குள் பரிதவித்துப் போனாள்... இன்னமும் எதுவுமே நடக்காததுபோல் முகம் காட்டிய சுப்பையா, ஆறுமுக நயினாரை, ஆழம் பார்த்தார்.

"என்னவே திடுதிப்புன்னு இப்படி” ‘என் மகளையும், மருமகனையும் பேரப்பிள்ளையோடு கூட்டிட்டுப் போகலாமுன்னு வந்தேன்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/175&oldid=1405253" இலிருந்து மீள்விக்கப்பட்டது