பக்கம்:பாலைப்புறா.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சு. சமுத்திரம் 177

நோய் அவங்களையும் பிடிச்சிருக்காது... என்கிறது என்ன நிச்சயம்? இது ஒங்க கணக்குப்படி, என்கணக்குப்படி இல்ல... இவங்களுக்கு அது வந்திருந்தாலும் கூட்டிக்கிட்டுப்போவீரா?"

ஆறுமுக நயினார், என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறினார். கமலநாதன், கலைவாணி இருந்த அறையைக் கோபங் கோபமாய் முறைத்தான். குழல்வாய்மொழி, இனிமேல் அந்த வீட்டில் இருப்பதில்லை என்று தீர்மானித்தவள் போல், தந்தையின்பக்கம் போய் நின்றாள். அதிரடியில் இறங்கும் பலராமன் கூட, தனக்கு சம்பந்தமில்லாதவர்கள் சண்டை போடுவது போல் அனுமானித்து, கையைக் கட்டி, கண்மூடி நின்றான். அதற்குள்ளாகவே...

சீனியம்மா, அந்த அறையில் இருந்து கலைவாணியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்தாள். யந்திரம்போல், தான் இழுத்த இழுப்புக்கு வந்த மகளை, ஆறுமுக நயினார் முன்னால் கொண்டு போய் நிறுத்தினாள்; பின்னர் அலறியடிக்காமல், ஆணித்தரமாய்ப் பேசினாள்.

‘இந்தாங்க... அண்ணாச்சி. கேட்கக் கூடாததை எல்லாம் கேட்ட பிறகு இவள் இருக்கப்படாது. உயிரோட லாந்தப்படாது. இவளை உங்கக் கையாலயே கொன்னுடுங்க. இல்லன்னா, ஒங்க கையாலயே அவளைக் கழுத்தைப் பிடிச்சி வெளிய தள்ளுங்க... நாங்க ஏன்னு கேட்கல’

சீனியம்மா, சதைப் பொம்மையாய் நின்ற மகளைக் கட்டிபிடித்துக் கேவினாள். ‘வாம்மா... நாம ரெண்டு பேருமாய் ஆற்றுலே குளத்தில விழுந்து சாகலாம்' என்று மகளைப் பிடித்து இழுத்தாள். இதனால், ஆறுமுக நயினாரின், மனம் இளகுவதற்கு பதிலாய் இறுகியது. இந்த இறுக்கம் பேச்சிலும் ஒலித்தது.

‘வாதத்துக்கு மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை. குழல் புறப்படு. மாப்பிள்ளை நடங்க... ஒப்பாவோட சொத்தும் வேண்டாம், சுகமும் வேண்டாம். கையும், காலும் கதியாய் இருந்தால் போதும்’

குழல்வாய் மொழியும், கமலநாதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆறுமுக நயினாரை எதிர்த்துக் கூட பார்க்கவில்லை, சுப்பையாதான், மனம் பொறுக்க முடியாமல், மன்றாடினார்.

‘கலைவாணி... ஒமக்கும் மகள் மாதிரிதான் மச்சான். இப்படி அரக்கத்தனமாய், பேச உமக்கு எப்படித்தான் மனம் வருதோ...ஒம்ம மகளா இருந்தால்...’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/177&oldid=1405255" இலிருந்து மீள்விக்கப்பட்டது