பக்கம்:பாலைப்புறா.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

180 பாலைப்புறா

சரஞ்சரமாய்க் கண்ணிர்விட்டார். தந்தையை மெள்ள விலக்கியபடியே, கலைவாணி. தனது அறைக்குள் வந்தாள். கட்டிலில் முகம் புதைத்தாள். கால்களைப் பரப்பிக் கொண்டாள். கரங்களை விரித்துக் கொண்டாள். எங்கே போவது... யாரிடம் போவது.. பெரியம்மா மகன் மோகன்ராம் வீட்டுக்குப் போகலாமா? அவன் மனைவி அசல் பிடாரியாச்சே... என் தம்பி கசக்குது... நான் மட்டும் இனிக்குதோ என்று கேட்டாலும் கேட்பாளே...? அவளும் அந்த துரோகி மனோகரின் அக்காதானே!

கலைவாணி, விடை கிடைக்காமல், குழம்பினாள். நோக்கும் திசையெல்லாம் அடைப்பு... பார்க்கும் இடமெல்லாம் பழிப்பு... படுக்கக் கூட இடம் வேண்டாம். இருக்கக்கூட இடமில்லாமல் போய்விட்டதே!

இதற்குள், வெளியே பேச்சுக்குரல் கேட்டது. உள்ளூர் விவேகிகளில் மூன்று பேரும், புதுப்பணக்காரரான ஆனந்தியின் தந்தை பெரியசாமியும் வந்திருப்பது, கலைவாணிக்கு தெரிந்து விட்டது. சுற்றி வளைத்த பேச்சு... இடையிடையே சுருக்கென்று குத்தும் சமாத்காரம்...

“சுப்பையா... மாப்பிள்ளை தப்பாய் நினைக்கப்படாது. கலைவாணி... எங்களுக்கும் மகள்தான்... ஆனாலும் ஊர் வாழணும்... நாளைக்கே ஒம்ம மகனுக்கு ஒருகட்டி வருதுன்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம்... அதுவேனல் கட்டியாக் கூட இருக்கலாம். ஆனாலும் ஒம்ம மகன், அந்தப் பாழாப்போன நோயா இருக்குமோன்னு பயப்படுவான். கூடப்பிறந்த தங்கச்சி உடன் பிறந்தே கொல்லும் நோயாளி ஆயிட்டாளேன்னு ஆத்திரப்படுவான்".

"அப்போ... அவளை ராத்திரியோட ராத்திரியா கொன்னு போடட்டுமா?”

"இப்படி எடக்கு மடக்காப் பேசினால் எப்படி, சுப்பையா நிலைமையை யோசித்துப் பாரும்... யோகம் பட்டில... இப்படி ஒரு நோய் பிடிச்சவன ஊர் ஜனங்க விரட்டி அடிச்சாங்களாம்... நாங்க அப்படியா சொல்லுறோம்... ஊருக்கு புறம்பா இருக்கிற செளக்குத் தோப்பு பக்கமாய் ஒங்க தோட்டம் இருக்குதே... அதில் ஒரு குடிசபோட்டு கொடும்... சாப்பாடு செளகரியமுல்லாம் செய்து கொடும்... வேண்டான்னா சொல்றோம்”.

“அழுவுறதுல... அர்த்தமில்ல... சுப்பையா... தலையிலே அன்றைக்கு எழுதுனதை அடிச்சி எழுத முடியாது”.

"நான் பெத்த பெண்ணாச்சே... ஒங்க பொண்ணுன்னா இப்படி பேசுவீங்களா...?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/180&oldid=1405258" இலிருந்து மீள்விக்கப்பட்டது