பக்கம்:பாலைப்புறா.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சு. சமுத்திரம் 181

"சாபம் போடாதே... சீனியம்மா... நம்ம ஊருல யாருடைய மகனோ மகளோ, செத்திட்டான்னு வச்சிக்கோ... அகால மரணமா ஆயிட்டுன்னு வைச்சுக்குவோம்; அழுவோம்... புரளுவோம்... ஆனாலும், செத்தவன்கூட நாம சாவோமா? மாட்டோம்; செத்துப் போனவங்களுக்கு துணி எடுத்து கும்பிடறோம். திவசம் வைக்கோம். அவங்க சமாதியிலே வெள்ளை அடிக்கோம்...பூமாலை போடுறோம்...அதே சமயத்தில், செத்துப் போனவள் வீட்டுக்குப் பேயாய் வந்தால், என்ன செய்யுறோம்? அந்தப் பேயை விரட்டுறதுக்கு, மந்திரவாதியைப் பார்க்கலியா... யந்திர மந்திரம் செய்யலியா? எவள் செத்ததுக்காக அழுது புலம்புறோமோ... அவள் பேயாய் வந்து குடும்பத்தை பிடிச்சால், அந்தப் பேய்க்கு கையிலே விலங்கு... கால் விலங்கு போடலியா?”

இன்னொருத்தர்,அந்த யதார்த்தத்தை உபதேசமாக்கினார். “கலைவாணியோட கோளாற இப்படித்தான் எடுத்துக்கணும்... நாங்க ஒங்க மகளைத் தள்ளி வைக்கல. அவளோட நோயைத்தான் தள்ளி வைக்கோம். பாலைப் பார்க்கிறதா. பால் காய்த்த பானையைப் பார்க்கிறதா என்கிறது பழமொழி... இதே மாதிரி, விஷத்தைப் பார்க்கிறதா... விஷம் இருக்கிற தங்கக் கிண்ணத்த பார்க்கிறதா? தங்க ஊசி என்கிறதுக்காக கண்ணிலே குத்திக்க முடியுமா... என்ன சொல்றே சுப்பையா".

கலைவாணியின் காதுகளில் மேற்கொண்டு எந்தப் பேச்சும் விழ வில்லை. அப்பா... பதில் சொன்னாரோ சொல்லவில்லையோ, கேட்க வில்லை.... காதுகள் மரத்துப் போன காரணமா... இந்த மனிதர்கள் வேறு வகையான எய்ட்ஸ் கிருமிகளாகிவிட்ட விரக்தியா... எந்த ஊருக்காக உழைத்தாளோ... அந்த ஊர்ப் பேச்சை இன்னும் கேட்கணுமா... எந்த ஊர் மண்ணை மஞ்சள் குங்குமமாக நினைத்தாளோ, அந்த ஊர் இப்படி தனக்கு இழவெடுப்பதை பார்த்துக் கொண்டு இருக்கணுமா... பலராமன் கூட ஊமையாகிவிட்டானே... இந்த ஊரில் இருந்தாலும், இந்த வீட்டில் இருக்கக் கூடாது. இந்த வீட்டில் இருந்தாலும், இந்த ஊரில் இருக்கப்படாது... ஊரும் வேண்டாம்... உறவும் வேண்டாம்... எங்கேயாவது போய்த் தொலயனும்... எங்கே... எங்கே?

கலைவாணி அல்லாடினாள்; உயிருக்கு உடலே சிறையானது. இந்த உயிரைப் போகவும் விடாமல், இருக்கவும் விடாமல் அதற்கு விலங்கு போட்டுவிட்டது. இயலாமை உணர்வுக்கும், எதிர்பாராத அதிர்ச்சியின் அலைகளுக்கும் மனமே புற்றானது... அவளுள் ஒரு வேகம்... உள்ளே இருக்கும் இந்த எய்ட்ஸ் கிருமிகள், மற்ற கிருமிகளைப் போல் தாக்கப்பட்டவர் செத்த பிறகும் வாழக் கூடியவை அல்ல... நோயாளி சாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/181&oldid=1405259" இலிருந்து மீள்விக்கப்பட்டது