பக்கம்:பாலைப்புறா.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

182 பாலைப்புறா

போது, அந்த நோயாளியுடன் உடன் கட்டை ஏறுகிறவை... இப்போதே ஏன் உடம்பை கொளுத்தி அந்தக் கிருமிகளையும் எரிக்கப்படாது? அய்யோ முடியலியே... முடியலியே...

சீனியம்மா, உள்ளே வந்தாள். மகளைக் கட்டிப் பிடிக்காமல், ஒரு மூலையில் மரத்துப் போய்கிடந்தாள். அவ்வப்போது, அய்யோ அய்யய்யோ என்ற சத்தம்...

கலைவாணி, கட்டிலில் இருந்து எழுந்தாள்... அம்மாவின் காலை எடுத்து நீட்டினாள்... அவள்மடியில் படுத்தாள். கைகளைப் பின்பக்கமாய்க் கொண்டு போய், அம்மாவின் முதுகை வளைத்துப் பிடித்தாள். ஐந்து வயதுச் சிறுமியாக, அம்மாவை எப்படி பிடிப்பாளோ அப்படி பிடித்தாள். அதே குழந்தைக் குரலோடு பேசினாள்.

“எம்மா, இந்த வீட்டைவிட்டு... போறதுகூட எனக்கு பெரிசில்லம்மா. ஆனால் கடைசியாய் ஒன் மடியிலே படுத்து உயிர் விடணும் என்கிற ஆசையிலே மண் விழுந்ததை நினைச்சால்தான், மனசு கேக்கமாட்டேங்கும்மா..."

‘ "என் கண்ணே... என் ராசாத்தி... ஒன்னை வீட்டை விட்டு அனுப்பமாட்டேண்டி...தனியாய் அனுப்பமாட்டேண்டி... நீ எங்கல்லாம் போறியோ அங்கெல்லாம் வருவேண்டி...”

கலைவாணியின் உடல் பஞ்சானது, உண்மை நெருப்பானது. அம்மாவால்கூட, போக வேண்டாம், போகப்படாதுன்னு சொல்ல முடியல. இதுக்கல்லாம் காரணம் தொலைவாய் இருக்கிற மனோகர், பக்கத்திலயே இருக்கிற டாக்டர் சந்திரா... நாளைக்கே சந்திராவைப் பார்க்கணும்... ஒரே வெட்டாய் வெட்டணும்... அப்புறம் ஜெயில்... இருக்கவும் படுக்கவும் ஏற்ற இடம்... மணி அடித்தால் சோறு, முடி முளைத்தால் மொட்டை...

கலைவாணி. இப்போது அழவில்லை. அம்மாவின் முதுகைத் தட்டிக் கொடுத்து, அவளை தன் மடியிலே போட்டுக் கொண்டாள். மகள், அம்மாவானாள். அம்மா, மகளானாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/182&oldid=1405307" இலிருந்து மீள்விக்கப்பட்டது