பக்கம்:பாலைப்புறா.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சு. சமுத்திரம் 191

“அதையும்... பார்த்துடலாம். நீங்க இன்சார்ஜ் என்கிறதாலயே, சர்வாதிகாரியா ஆக முடியாது. நானும் ஒரு டாக்டர். லீவ் லட்டரை கிழித்துப் போடாத டாக்டர். மருத்துவ நிலைய மருந்தை பிரைவேட் பிராக்டிஸ்க்கு எடுத்துட்டுப் போகாதவள். ஏய்... மாலதி... பெட் ஏன் இன்னும் ரெடியாகலே..."

தொலைவில் நின்ற மாலதி, சண்டை நடக்கும் இடத்தை நோக்கி கோபக் கோழியாய் நடந்து வந்தாள். ஏழெட்டு நோயாளிகளைக் கூட்டி வந்தாள். இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில், அவர்கள் உள் நோயாளிகள்... அவர்களைப் பார்த்ததும், பயந்து போன முஸ்தபா. மாலதி கண்ணடித்ததும், மதர்ப்பாய் நின்றார். சந்திரா, மாலதியின் போர்வியூகம் புரியாமலே நின்றாள். கலைவாணியோ, நாற்காலியில் பின்புறமாய் வளைந்து, கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.

ஒரு பிரசவப் பெண், ஒரு மலேரியா மனிதர், ஒரு எஸ்.டி.டி. ஆசாமி உள்ளிட்ட பல நோயாளிகள், டாக்டர் சந்திராவையும், கலைவாணியையும் மாறி மாறிப்பார்த்துக் கூக்குரலிட்டார்கள்.

"என்னம்மா... நெனைச்சிக்கிட்டே? நாங்களும் இவளை மாதிரி ஆகணுமா? இது ஆஸ்பத்திரியா... இல்ல சுடுகாடா...? மொதல்ல எங்களை விரட்டிட்டு, அப்புறமாய் இவளை சேர்த்துக்கோ... ஒனக்கு எவ்வளவு கமிஷன் கொடுத்தாடி... வாங்க... பெரிய டாக்டர்... கிட்டே போவோம். அய்யோ இவள சேர்க்கணுமுன்னு சொல்றவள், நமக்கு மருந்துக்குப் பதிலாய் விஷத்தைக் கூட கொடுப்பாளே... நான் வீட்டுக்கு ஒடிப் போகப் போறேன்... சர்க்கார் ஆஸ்பத்திரிக்குப் போகாத போகாதே... அது ஆஸ்பத்திரி இல்ல.... அசல் கசாப்புக்கடைன்னு என் வீட்டுக்காரர் சொன்னது சரியாப் போச்சே.”

பிரசவப் பெண், அங்கேயே பிள்ளை பெறப்போவதுபோல், கால்களை விரித்து வைத்துக் கொண்டு, தன்வாயிலும் வயிற்றிலும் அடித்தாள். மலேரியா மனிதரும், ஒரு பொம்பளை நோய்க்காரனும், இன்னொரு சிறுவனும், சந்திராவை, கேரோ என்பதைக் கேள்விப்படாமலே சுற்றி வளைத்தார்கள். ஒரு நடுத்தர வயது மனிதர், அவளை அடிப்பதற்காக கையைக் கூட ஓங்கினார். சந்திரா கொடுத்த வைட்டமின் மாத்திரை, அப்படி அவரைத் துள்ளவைத்தது. இதற்குள் அப்போதுதான் வார்டில் இருந்து வந்த இரண்டு பெண்கள், கலைவாணியின் தலையைத் தூக்கி நிறுத்தி, ‘இவளுக்குத்தான் புத்தியில்ல... உனக்கு எங்கேடி போயிட்டு? எங்களை கொல்றதுக்கின்னே வந்தியா... போடி... போய்த் தொலையடி' என்றார்கள். இந்த அமளியிலும், அபார்ஷனுக்காக வந்திருக்கிற ஒரு இளம் பெண்ணும், காலில் கட்டுப்போட்ட ஒரு பெரியவரும் அமைதி காத்தார்கள். கலைவாணியைக் கருணையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/191&oldid=1405365" இலிருந்து மீள்விக்கப்பட்டது