பக்கம்:பாலைப்புறா.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

192 பாலைப்புறா

பார்த்தார்கள். பெரியவர் கேட்டார்.

‘நன்றி கெட்டு... பேசாதீக... சனங்களா... சந்திராம்மா... நம்மை எப்படில்லாம் கவனிக்கிறாங்க... நாளைக்கு நமக்கு எதாவது ஆகுமுன்னா... இந்த பெண்ணை சேர்ப்பாங்களா'.

"ஒனக்கென்ன... ஒனக்கு கட்டையில போற வயசு...”

அந்த நோயாளிக் கூட்டம், அந்தப் பெரியவரை அடிக்கப் போனது. இத்தனைக்கும் இடையே, சந்திராவுக்கு சிரிப்பு கூட வந்தது. ஏசுபிரான் சொன்னது போல், இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே செய்கிறார்கள். இவர்களுக்கு ரட்சிப்பு உண்டு... இதோ இவர்களை ரசித்துப் பார்க்கும் இந்த முஸ்தபா பேடிக்கு... எதுவுமே இல்லை... நிர்வாணமா அலையக் கூட யோக்யதை இல்லாதவன்.

டாக்டர் சந்திரா, அந்த நோயாளி கூட்டத்திடம் போனாள்... ‘சொல்வதைக் கேளுங்க... ‘ என்று கத்தினாள். நோயாளிக் கூட்டம், லேசாய் அமைதிப்பட்டது. அவள் பேசுவதற்கு காது கொடுக்கப் போனது. அதற்குள், அந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மைய ஊழியர்கள் ஒன்று திரண்டார்கள். கம்பவுண்டர்..., கிளார்க்..., நர்சுகள்., ஆயாக்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பார்வையாளர்கள், இவர்களுக்கு தலைமை வகித்த மாலதி, இன்சார்ஜ் முஸ்தபாவிடம், தானைத் தலைவியாய் பேசினாள்.

“நாங்க குடும்பத்தோட இருக்கிறவங்க... டாக்டர். இந்த அம்மாவைப் போல தனிக்கட்டை இல்ல டாக்டர்... எங்களுக்கு குழந்தைங்க இருக்கு. புருஷன் பெண்டாட்டின்னு இருக்கு... நாங்க இங்கே சம்பளம் வாங்கதான் வேலை பார்க்கோமே. தவிர எய்ட்ஸ் வாங்க இல்லே".

டாக்டர் முஸ்தபா, எல்லோரையும் கையமர்த்தினார். ‘பொறுங்க பொறுங்க... என்னை மீறி எதுவும் நடக்காது’ என்றார். பிறகு சந்திராவைப் பார்த்து, இளக்காரமாகக் கேட்டார்.

"இப்போ, என்ன சொல்றீங்க... டாக்டர். இதுக்குப் பிறகும், இந்தப் பெண்ணை சேர்க்கணுமுன்னு சொல்லப் போறீங்களா?”

டாக்டர் சந்திரா, கைகளைப் பிசைந்தாள். அதற்குள் கலைவாணி, முந்திவிட்டாள். அவள் வாய் கோணியது. பார்வை, சாய்வாகி கூர்மைப்பட்டது. கீழே கிடந்த பேப்பர் வெயிட்டை எடுத்துக் கொண்டு, பல்லைக் கடிக்க, கால் காலை உதைக்க, டாக்டர் முஸ்தபாவின் தலைக்குக் குறி வைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/192&oldid=1405366" இலிருந்து மீள்விக்கப்பட்டது