பக்கம்:பாலைப்புறா.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

க. சமுத்திரம் 195

‘நான் அந்த அர்த்தத்துல கேட்கலியே... ஒரு வேளை தம்பி மனோகருக்கு வந்தது... அந்தம்மாவுக்கும்...’

‘இருக்காது... அக்காவும்... தம்பியும் கீரியும் பாம்பும் மாதிரி... மனோகர் மாப்பிள்ளை அக்காவையும் மீறி என்னை உயிருக்கு மேலாய் நினைச்சான்.’

‘சரி... எங்கேயாவது ஆஸ்பத்திரியில் கடந்த ஏழு வருடத்தில நீங்க எதுக்காவது சிகிச்சைக்குப் போய்... உடம்பிலே ரத்தம் கொடுத்தாங்களா...’

"ஆமா... அஞ்சு வருஷத்துக்கு முன்னால, ஒரு வரப்புச் சண்டை; எதிராளி, என்வெட்டரிவாளால தலை வேற முண்டம் வேறயா போனான்... ஆனால் அப்படி விழுறதுக்கு முன்னால, இந்தாப்பாருங்க... தலையில தழும்பு. ஊனிக் கம்பால என் மண்டையப் பிளந்துட்டான். எனக்கு மயக்கமாயிட்டு. பிளஷர் கார்ல தூக்கிட்டுப் போயிருக்காங்க. ரத்தமும் கொடுத்திருக்காங்க. டிஸ்சார்ஜ் ஆனபோது, ரத்தம் கொடுத்தவனே என்கிட்ட நூறு ரூபாய் இனாமாய் கேட்டான். நான் முந்நூறு ரூபாயா கொடுத்தேன். உயிரை எடுக்காமல் விட்ட போலீஸுக்கு பத்தாயிரம் கொடுத்தபோது, உயிர் காத்த இவனுக்கு, முந்நூறு ரூபா கொடுக்கிறதா பெரிசு?”

இதற்குள், திறந்திருந்த அந்த வாசல் வழியாக, சந்திராவிடம் மன்றாடிய அதே மனிதர் வந்தார். சாராய வாசனையுடன் பேசினார்.

‘டாக்டரய்யா... டாக்டரய்யா... நாம் செத்த பிறகும் நம்மோட உடம்பு பிறத்தியாருக்கு உதவணுமுன்னு கூட்டம் போட்டு பேசுற ஒங்களுக்கு இந்த குணசீலனைப் பற்றி தெரியுமா? செத்த பிறகு என்ன... செத்த பிறகு.. உயிரோட இருக்கும் போதே, உடம்பால உதவுறவன் இந்த குணசீலன்... என் ரத்தம் ஓ குரூப். அதுவும், நெகட்டிவ். எத்தனை பாட்டில் வேணும்...'?

"குணாளா... மரியாதையாய் போங்க. இல்லாட்டால், போலீஸ்ல ஒங்களை ஒப்படைக்க வேண்டியதிருக்கும்?”

அசோகன், டெலிபோனில் ஏழுக்கும் அதிகமான எண்களைச் சுழலவிட்டு ‘இன்ஸ்பெக்டர் இருக்காங்களா' என்று கேட்காத குரலிடம் கேள்வி கேட்டபோது, குணசீலனுக்கு பாதி போதை போய்விட்டது. அசோகனை, கையெடுத்துக் கும்பிட்டு விட்டு ஒடப்போனார். இட நெருக்கடியில் அது முடியாது என்பதால், வேகமாக தலையைத் திரும்பியவர், மோகன்ராமை உற்றுப் பார்த்தார். சுவையோடு பார்த்தார். இனிமையோடு கேட்டார்.

‘அண்ணா... தர்மப்பிரபுவே! நீ கொடுத்தே பாரு... முந்நூறு ரூபாய்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/195&oldid=1405369" இலிருந்து மீள்விக்கப்பட்டது