பக்கம்:பாலைப்புறா.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சு. சமுத்திரம் 199

"கரெக்ட்... இப்படித்தான் இருக்கணும்... ஆனாலும் ஒண்ணும்மா... இனிமேல், இந்த சந்திராவை விரோதியாய் நினைக்காதே. ஒருத்தனுக்கு அல்லது ஒருத்திக்கு எய்ட்ஸ் இருக்குதா... இல்லியா என்கிறதை சம்பந்தப்பட்டவங்ககிட்டதான் டாக்டர் சொல்லணும் என்கிறது. இப்போதைய மெடிக்கல் தர்மம். அவனோ அவளோ கல்யாணம் செய்வாங்களா செய்யணுமா... இதல்லாம் இப்போதைக்கு டாக்டரோட டூட்டி இல்ல... இன்னும் சொல்லப் போனால், ஒருத்தருக்கு இருக்கிற எய்ட்ஸை காரணமாய் காட்டி... கோர்ட்ல விவாகரத்துகூட வாங்க முடியாது. காரணம், எந்த டாக்டரும் எய்ட்ஸ் சர்டிபிகேட் கொடுக்க முடியாது. கொடுக்கக் கூடாது... இப்படிப்பட்ட சமூக விரோத சூழலுல கூட, டாக்டர் சந்திரா ஒங்களுக்காக தன்சக்திக்கு ஏற்ற அளவு போராடி இருக்காங்க. ஒரு வேளை சினிமா பாணில அவங்க ஒங்க கல்யாணத்தை நிறுத்தி இருந்தால்... மோகன்ராம், இந்த அம்மா தலையை மட்டும் தூக்கிட்டு தைரியமா போலீஸ் நிலையத்திற்கு போயிருப்பார். அப்போக்கூட போலீஸ்ல கேஸ் ரிஜிஸ்டர் செய்திருக்கமாட்டாங்க. போலீஸ் போலீஸா இல்லாதவரை, நியாயம் நியாயமா இல்லாத வரை, டாக்டரும் டாக்டரா இருக்க முடியாது. இதை நீங்க புரிஞ்சிக்கணும். கல்யாணத்திற்கு ஆயத்தமாகிற மணமகனுக்கும், மணமகளுக்கும் மெடிக்கல் டெஸ்ட் கட்டாயமாக்கப்படாதவரை, இந்த மாதிரி கோரங்கள் நடக்கும். அப்போக்கூட நம்மாளு காசு வாங்கிட்டு... கள்ள சர்டிபிகேட் கொடுப்பான். வேற பேஷண்டா இருந்தால் இப்படிப் பேசமாட்டம்மா... ஒன்னையும் இந்த சந்திராவை எப்படி நேசிக்கேனோ, அப்படி நேசிக்கேன்... அதனாலதான் இப்படி பேசுறேன்...”

டாக்டர் சந்திரா, அசோகனைப் பொருள்பட பார்த்தாள். வட்டியும் முதலுமாய் வாஞ்சையோடு பார்த்தாள். அவளுக்கு, அவன் ஏன் தன்னை எடுத்த எடுப்பிலேயே அப்படி விமர்சித்தான் என்பது இப்பொழுதுதான் புரிந்தது. உண்மையைத்தான் சொன்னார். ஆனால் அதை தலைகீழாகச் சொல்லி, கலைவாணியை சரிப்படுத்தப் பார்க்கிறார்.

டாக்டர் அசோகன் பேசி முடித்தபோது, கலைவாணி இயல்பு நிலைக்கு வந்துவிட்டாள். அசோகனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். சந்திராவின் கையோடு கைகோர்த்தாள். சந்திராதான் கேட்டாள்.

"அப்போ அபார்ஷன் எப்போ வச்சிக்கலாம்?” "இன்றைக்கே அட்மிட்பண்ணிடுறேன்” கலைவாணி பேசினாள்... ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு சோகச் சுமை. துக்கமான ஒலி வாகனத்தில், அந்த வார்த்தைகள் விட்டுவிட்டு வெளிப்பட்டன. கோர்வை அற்று தெறித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/199&oldid=1405373" இலிருந்து மீள்விக்கப்பட்டது