பக்கம்:பாலைப்புறா.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

200 பாலைப்புறா

"நான்... அப்பாவி டாக்டர்... யாரையுமே மனசிலகூட நினைக்காதவள் டாக்டர். அப்போக் கூட என்னோட மாமியாரு நான்தான், தகாத...”

‘அழாதம்மா... முற்றும் நனைந்தாருக்கு ஈரம் இல்லை...’ ‘என்னோட தகாத உறவாலதான், மனோகருக்கு வந்ததாய் மாமியார் சொல்றாள். ஊரும் உறவும் இதை நம்புது. எய்ட்ஸைகூட என்னாலதாங்கிக்க முடியும்... ஆனால்... இதை...’

‘விட்டுத்தள்ளும்மா... நாம் எந்த குற்றமும் செய்யாமல், இருக்கும் போது, அந்தக் குற்றம்... நம்ம மேல சுமத்தப்படும்போது, நமக்குள்ளயே ஒரு சிரிப்பு வருமே... லேசாவாவது வருமே... அந்தச் சிரிப்பை பலப்படுத்து.., இப்போ என்னையே எடுத்துக்கோ... சந்திராவுக்குத் தெரியும்... எய்ட்ஸ் நோயாளிகளுக்குன்னு உள்ளே தனி வார்டே வச்சிருக்கேன். அவ்வளவு பேசுற டாக்டர் சுமதி கூட, என்கிட்டதான்.அனுப்புவாங்க... இதனால எனக்கு வருகிற சராசரி நோயாளிங்க எண்ணிக்கைக்கூட குறைஞ்சிட்டு; அப்பாதான் திட்டி திட்டி பணம் அனுப்புறார். அவரும் பெரிய பணக்காரர் இல்ல... ஆனாலும் வெளியிலே என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? நான் அரை கிறுக்கனாம்... எனக்கும் எய்ட்ஸ் இருக்குதாம்... அதனாலதான், எய்ட்ஸ் நோயாளிய அட்மிட் செய்றேனாம்... பாவிப்பயல்க, குறிப்பா... இந்த டாக்டருங்க... ஒன்கிட்ட மட்டும் சொல்றேன்னு எல்லார் கிட்டயும் இப்படிச் சொல்லிச் சொல்லி, இப்போ ஒருத்தன்கூட எனக்கு பெண் கொடுக்க வரமாட்டாக்கான். சத்தியமான வார்த்தையம்மா... என் மேலே உயிரையே வைத்திருக்கிறதாய் சொன்ன எங்க ஊரு வாத்திச்சி... என்னைப் பார்த்தாலே ஓடுறாள்...’

‘வெக்கமா இருக்கும் டாக்டர்’ "வெக்கமில்ல. வெக்கப்பட வேண்டிய விஷயம்... என் தாலிக்காகவே கழுத்தை வளைத்து வச்சிருந்தவள், இப்போ மஞ்சள் சரட்டோட ஓடுறாள்... ஒரு வேளை இதையும் துக்கத்தில ஒடுறதாய் சொல்வீங்க. காதல் துக்கத்தை பகிர்ந்து கொள்ளத்தான் ஒரு என்சீனியரைக் கட்டிக்கிட்டாளாம்”.

டாக்டர் அசோகன் சிரித்தபடியே, அந்தப் பெண்களை அழ வைக்கப் போனான்; பிறகு சுதாரித்துக் கொண்டான். ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. சொல்லலாமா... வேண்டாமா என்பது போல், வலது கை ஆள்காட்டி விரலால் தலையைத் தட்டினான். பிறகு கலைவாணிக்கு, அவ்வப்போது தலைகாட்டும் இஸ்டிரியாவை கருத்தில் கொண்டு தெரிவித்தான்.

‘இன்னொரு முக்கியமான விஷயம்மா... உடலுறவால, உடனேயே ஒருத்திக்கோ, ஒருத்தனுக்கோ ஹெச்.ஐ.வி. வரணுமுன்னு அவசியம் இல்ல. பல ஹெச்.ஐ.வி. நோயாளிகளோட மனைவிகளை டெஸ்ட் செய்திருக்காங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/200&oldid=1405374" இலிருந்து மீள்விக்கப்பட்டது