பக்கம்:பாலைப்புறா.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 207

பிடித்து நிறுத்தினாள்.

‘சும்மா சொல்லுங்க டாக்டர்... நான் எல்லாவற்றையும் பாசிட்டிவா

எடுத்துக்குவேன்’

‘என் வாயால... சொல்லணுமாம்மா... ஒனக்கு இல்லன்னா... நீ

மயக்கத்தில கிடந்தாலும் தட்டி எழுப்பி சொல்லி இருக்க மாட்டேனா...’

கலைவாணி, மெள்ளத் தலையாட்டினாள்...அருகே நின்ற அசோகனின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டாள். கம்பராமாயணத்தில், ராமனைத் தருவாய்’ என்று விசுவாமித்திரர் கேட்ட போது, தசரதன் துடித்தானாமே ‘கண்ணிழந்தான், பெற்றிழந்தான்’ என்பது போல். அந்தப் பாடல்தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அசோகன், அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

‘மரணம் எல்லாருக்கும் பொதுவானது. சிலர் முன்னால போறாங்க... பலர் பின்னால போறாங்க... அவ்வளவுதான் வித்தியாசம்...’

‘சரிதான் டாக்டர்... எதிர்காலம் புதிராய் இருக்கிறதாலதானே நிகழ்காலம் பிடிப்பாய் தோணுது... புரியாத எதிர்காலத்தை நம்பித்தானே நம்பிக்கை கொடுக்காத நிகழ் காலத்தை, கடந்த காலமாக்கப் பார்க்கோம். இந்த மருத்துவமனை ஒரு காலத்தில் மாவட்ட மருத்துவமனையை விட, பெரிசா வரலாம் என்று நம்பித்தானே, அந்த நம்பிக்கை ஒங்களை இயக்க வைக்குது. இது இடிந்து போயிடுமுன்னு... ஐயாம் ஸாரி... ஒரு நோயாளிக்கு உதாரணம் கூட கிருமித்தனமா வருது பாருங்க...’

‘கத்தரிக்காய் என்று சொல்றதாலயே, பத்தியம் முறிஞ்சிடாதம்மா.. சொல்றது சராசரி மனுஷனுக்கு சரி. ஆனால், முக்காலத்தையும் உணர்ந்த முனிவர்கள் எப்படிப் பக்குவப்பட்டு இருந்ததாய் நம் புராணங்கள் சொல்லுது. அப்படி ஒன்னாலும் ஆக முடியும்... என்னாலயும் ஆக முடியும்...’

‘ஆனால்... பாழும் மனசு... கேட்க மாட்டக்கே டாக்டர்’

‘இதனாலதான். சொல்றேன். மனம் வேறு... நாம் வேறுன்னு எண்ண னும். அந்த எண்ணத்தையே பலப்படுத்து... உடல்வேறு நாம் வேறன்னு நினைத்துப் பாரு. நமக்கு... நல்லதோ, கெட்டதோநடக்கும் போது அது வேறு யாருக்கோ... நடக்குறதாய் நினை. நம் கஷ்டங்களையும்... நஷ்டங்களையும் நாமே வேடிக்கை பார்க்கணும். எய்ட்சால் பாதிக்கப்படுகிறவர்களில் நீ லட்சங்களில் ஒருத்தி... நீயாவது பரவாயில்ல... ஒனக்கு நானிருக்கேன். சந்திரா இருக்காங்க... ஆனால் எத்தனை ஆயிரமாயிரம் ஏழைகள், எய்ட்சுன்னு தெரியாமலே... துள்ளத் துடிக்க இறக்கிறாங்க தெரியுமா...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/207&oldid=635649" இலிருந்து மீள்விக்கப்பட்டது