பக்கம்:பாலைப்புறா.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 209

தோழிகளும் அழுதுவிட்டார்கள். ஆனால், அந்த உருவம் சிரிக்கிறது. “இன்று செய்யாவிட்டால் எப்போது... உன்னால் முடியாவிட்டால் வேறு யாரால்...?” என்று தலைக்கு மேல் சுவரில் எழுதப்பட்ட மஞ்சள் எழுத்து வாசகத்தைப் படிக்கும்படி முகத்தை நிமிர்த்துகிறது... ‘ஏன் அழுகிறாய்? எதைக் கொண்டு வந்தாய்...? எதைக் கொண்டு போகப் போகிறாய்? என்று எதிர்ப் பக்கம் எழுதப்பட்ட பகவத் கீதை வாசகத்தை படிக்கச் சொல்கிறது... இந்தஉருவத் தின் பெயர் ராமகிருஷ்ணன். கோவையில் விமானப்படைத் தேர்வுக்கு போயிருக்கிறான். ஏதோ ஒரு சோதனைப் பயிற்சியில், மேலே இருந்து கீழே விழுந்து விட்டான். கால்களும் கைகளும் செத்த நிலையோட தொங்க, அவனை இந்த ஊரில் போட்டு விட்டுப் போய் விட்டார்கள். ஆனாலும் அவன் அசரவில்லை... கை, கால்கள் செத்துச் செத்து, அவன் மனதிற்கு உரமூட்டின... நல்லவர்களை ஒன்று திரட்டி, ஒருமுகப்படுத்தி உடல் ஊனமுற்றோர் விடுதி கட்டினான். ஊர் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் கட்டினான். முதியோர் இல்லம் அமைத்தான். தச்சுப்பட்டறை வைத்தான், ஆனால், எந்த இடத்திலும் தன் புகைப்படத்தை மட்டும் வைக்கவில்லை. இன்று இந்த உருவம் உள்ள இடம் சித்தர் பூமிபோல் ஆகிவிட்டது.திக்கற் றோருக்கு தெய்வத் திருத்தலமாகி விட்டது. இந்த கிராமத்திற்குப் போகும் பாதை, இன்னும் கல்லும் முள்ளுமாய் ஆனதுதான். ஆனால் அந்த உருவத்தை நினைத்து நடந்தால், அவையே, கனியும் மலருமாகும். முக்தியுமல்ல... மூடப் பக்தியுமல்ல... அசல் மனோபலம்...

‘பிஞ்சில் பழுத்த தெளிவோ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட கலைவாணியின் கண்முன்னால் கோவை. கிருஷ்ணமூர்த்தி... தென்காசி யில் ஒரு இசைமேடை... பக்கவாத்தியங்கள் ஆயத்தத்தைக் காட்டுவது போல், இழுத்து இழுத்து மூச்சு விடுகின்றன. பெருமூச்சாய் அல்ல... இசைமூச்சாய். ஆயிரக் கணக்கான மக்கள்... இரண்டு பேர் தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஒன்றைத்துக்கி வருகிறார்கள். அந்த உருவத்திற்கு, இடுப்புக்கு கீழே எதுவும் இல்லை. தொடை மாதிரி சின்ன முடிச்சுஉள்ளே இருக்கிறதாம். கால்சட்டை வெறுமையாய் தொங்குகிறது... தோள்... என்றோ... கைகள் என்றோ எதுவும் கிடையாது. ஒரு சதைப் பிண்டம். இவளது மூணு மாதக் குழந்தை எப்படி இருந்திருக்குமோ... அப்படி... அந்த உருவத்தை ஒரு மெத்தையில் தூக்கி வைக்கிறார்கள். நந்தனாருக்கு கொடிக்கம்பம் மாதிரி, இவருக்கு மைக் வளைத்து கொடுக்கிறது... அந்த உருவம் வாயைத் திறக்கிறது. தாளலயமாய் தட்டுவதற்கு கரங்களோ... தட்டப்படுவதற்கு தொடையோ இல்லாத அந்த உருவத்தின் வாயில், ஒரு கோடி ஒளி அதிர்வுகள்... ஊனை உருக்கும் குரல்... உள்ளத்தை நெகிழ வைக்கும் பாடல்கள்... விதவிதமான குரல் வளைவு. வேக வேகமான, மெதுமெதுவான ஏற்ற இறக்கங்கள்... அத்தனையும் . 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/209&oldid=635651" இலிருந்து மீள்விக்கப்பட்டது