பக்கம்:பாலைப்புறா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 21

போடுவாங்க. நம்ம ஊர்க்காரங்களைப் பற்றி ஒனக்குத் தெரியாதா... சீக்கிரமாய் படி... என் கண்ணுக்கு எதுவும் தெரியல்லே"

"நீ வேற... என் பேரை பின்னால போட்டுட்டு.. அவன் பேரை எப்படி முன்னால போடலாமுன்னு சண்டைக்கு வரப் போறாங்க. இதனால்தான் படித்துப் படித்து சொன்னேன்”.

"போகட்டும். இப்போ படித்துப் பாரு..."

உள்ளுர் அறிவொளி இயக்க ஆசிரியையான ஆனந்தி, அந்தக் காகித அழைப்பிதழில் கண்களை விட்டபோது, பீடிக்காரி தேனம்மா, இன்னொரு அழைப்பிதழை எடுத்தாள். அவள் எடுத்ததைப் பார்ப்பதற்காக, உள்ளே மூக்கை விட்ட பாம்படம் போட்ட கனகம்மா, அதிசயித்துப் பேசுவதுபோல் பேசினாள்.

“எப்பாடி... முந்தா நாள் கார்டு... லெட்டர் மாதிரி இருந்துது. இப்போ என்னடான்னா முத்து முத்தா... ரெண்டுமே என் கல்யாணநோட்டீஸ் மாதிரி இல்லியே... பொறேன் வாடாப்பூ. கிழிச்சிடுவே போலுக்கே”

"நீங்க கிழடு பாட்டி... அதனால உங்க நோட்டீஸாம் கிழடாயிட்டு... அந்தக் காலத்த இந்தக்காலத்தில கொண்டு வரப்படாது"

"பழுப்பு ஒலை விழுதுன்னு பச்சோலை சிரிச்சுதாம்... நீயும் கிழவி ஆவேடி..."

"அதுவரைக்கும் சிரிச்சிட்டுப் போறேன்."

"கனகத்தே சும்மாயிருங்க, ஒங்களுக்கு மட்டும் இந்த பாம்படக் காதை அறுத்து கம்மல் வச்சால், மாமா... அவருகாத பிடிச்சிட்டு... தோப்புக்கரணம் போடுவாரு..."

"இப்ப மட்டும் என்னவாம்...?”

வாடாப்பூவும், தேனம்மாவும், ‘பாம்படப் பாட்டி' கனகம்மாவோடு சேர்ந்து சிரித்தார்கள். கலைவாணி முகம் சுழித்தாள். உடனே வாடாப்பூ ‘வேலைக்கு' வந்தாள்.

"ஆனந்தி படிச்சுக் காட்டேன்... எப்படி எழுதி இருக்குதுன்னு என்னை மாதிரி கைநாட்டுக்குத் தெரியட்டும்".

"இதுக்குத்தான்... ஒன்னை அறிவொளி இயக்கத்தில சேரச்சொன்னேன். வந்திருந்தால், எனக்கே படித்துக்காட்டுவே..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/21&oldid=1404950" இலிருந்து மீள்விக்கப்பட்டது