பக்கம்:பாலைப்புறா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 பாலைப்புறா

"நான் என்ன தாயி பண்ணுவேன்? நீ சொல்லி நானுந்தான் வந்தேன். ஆனால் அந்த பேதில போவான்... அப்படி வந்த சமயத்தில என் கொண்டைய பிடிச்சு இழுத்துட்டுப் போனான். நீகூட தட்டிக் கேக்கல.”

வாடாப்பூவின் முகம் சுருங்கியபோது, தேனம்மாவும், தனது நினைவுகளை அழிப்பதற்காக, அந்த அழைப்பிதழை எடுத்து, சத்தம் போட்டு படித்தாள்.

"வெள்ளையன்பட்டி... எம்மாடி பேரப்பாரு ஊர்ல முக்கால் வாசிப் பேரு... நனைஞ்ச பன தூரு... காக்காவே கேலி பண்ணும். ஏன்னா அதுக்காவது கொண்ட வெள்ளை."

அடுத்த அறைக்குள், அவித்த அகத்திக் கீரையை, சோளக் கஞ்சியோடு பினைந்து பிணைந்து, பக்கத்தில் மகன் இருப்பதையும் மறந்து, உப்பு மிளகாயோடு உள்ளே தள்ளிக் கொண்டிருந்த சுப்பையா, வாயும் சோறுமாய் கத்தினார்.

"ஏழா தேனு... வாய் என்ன ரொம்ப நீளுது... ஒங்க ஊர்க்காரன் கலப்படமுன்னா... நாங்களும் அப்படி ஆகணுமா...?"

அப்பா பக்கத்தில் அரிசி சோற்றை சாப்பிட்ட கமலநாதன், தான், அப்படிப்பட்ட பனைக் கருப்பு அல்ல என்பதால், ஆரம்பத்தில் சிரித்தான். அப்புறமாய் திடுக்கிட்டு, அசல் சிவப்பான அம்மாவைப் பார்த்தான். இதனாலதான், அப்பா, அம்மாக்கிட்டே தகராறு வரும் போது எல்லாம் ஒன் பரம்பரையைப் பற்றி எனக்குத் தெரியாதா என்கிறாரா!

தேனம்மா, உள்ளே உண்டு முடித்த சுப்பையாவை கள்ளச் சிரிப்பாய்ப் பார்த்தபோது, கலைவாணி, உள்ளறையைப் பார்த்து குரலிட்டாள்.

"எண்ணி... இங்க வந்து படித்துக்காட்டுங்க”

"நீ படிச்சுக்காட்டுனால் என்ன?”

"இதை எழுதுனது நான். திருத்துனது ஆனந்தி... அதனால எங்க கண்ணுக்கு தப்பு தெரியாது... வாங்கண்ணி!”

“எப்படிவரமுடியும்? உங்கண்ணன் புத்தி ஒனக்குத் தெரியாதா... எதுலே விட்டுட்டுப் போனாலும், இப்டி சாப்பிடும் போது விட்டுட்டுப் போனால்... கூத்தடிச்சுடுவாரே, சும்மா துள்ளாதீங்க... சாப்பிடுங்க... சோறு விக்கிடும்!”

வெளியறையில், ஆனந்தி, வாடாப்பூவிடம் ரகசியமாய் கேட்டாள். "அது என்ன 'எதுல’... என்னது இந்த எதுல?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/22&oldid=1404951" இலிருந்து மீள்விக்கப்பட்டது