பக்கம்:பாலைப்புறா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 23

"கல்யாணமானால்... ஒனக்கும் தானாப்புரியும். ஏன் அப்படி சிரிக்கே! அப்படி ஆகணுமுன்னு அவசியம் இல்லியா? இதோ மீராவே வந்துட்டாள். என்னடி ரெண்டு நாளாஆளு அகப்படல."

பாவாடை-தாவணி மீரா, வாடாப்பூவை, அலட்சியமாகப் பார்த்தாள். இடது கை தங்க வளையல்களை, வலது கையால் உருட்டியபடியே "இந்த மாதிரி ‘டி’ போடுற வேலைய என்கிட்ட வச்சுக்காதே" என்றாள்.

வாடாப்பூவின் முகம் வாடியது. தேனம்மாவுக்கு மனம் கேட்கவில்லை. மீராவை, சூடாகப் பார்த்துவிட்டு, பிறகு வாடாப்பூவைப் பார்த்துப் பேசினாள்.

"ஒனக்கு மூளையே கிடையாது. ஒருத்தர் நம்ம கிட்ட எந்த அளவுக்கு பழகிறாங்களோ அந்த அளவுக்குத்தான் நாமும் பழகணும்."

பாம்படங்கள் காதாட, கனகம்மா, ஒரு சந்தேகம் கேட்டாள்.

"தேனு! நீ சொல்றது ஆம்புளைக்கும், ஆம்புளைக்கும் சரி; பொம்பளைக்கும் பொம்பளைக்கும் சரி... ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் எப்படி சரியாகும்? ஒரு ஆம்புள, நம்ம கிட்ட பழக நினைக்கிறது மாதிரி நாமும் பழகுனால்... அது வேற இதுல தான் கொண்டு விடும்... இல்லியா மயினி..."

இதற்குள் ‘மயினி' சீனியம்மா வெளிப்பட்டாள். "என்னடி ஒனக்கு வயசு திரும்புதா" என்று கனகம்மாள் தலையில் கை ஊன்றியபடியே உட்கார்ந்தாள். பிறகு எல்லோரையும் பார்த்துவிட்டு, கலைவாணியை குறிப்பாக நோக்கி விட்டு, கேட்டாள்.

"என் மகள்... கலைக்குத்தான் புத்தியில்ல... இன்னும் இருபது நாளையில கல்யாணம். சாஸ்திரப்படி அங்குமிங்குமாய் அலையப் படாது. இவள் மாமியாரு வேற என்கிட்ட கரடி மாதிரி கத்துறாவ... நீங்களாவது இவளுக்கு புத்தி சொல்லப்படாதா?”

கலைவாணி, பேச்சை மாற்றவோ அல்லது அவசரத்திலோ ஆணையிட்டாள். மீராவின் கையில் அழைப்பிதழை திணித்து, அதை சத்தமாய்ப் படித்துக் காட்டும்படிச் சொன்னாள். மீரா பேசாமல் நின்றாள். பிறகு கலைவாணியின் தம்பி பலராமன், தன்னை ஏறிட்டுப் பார்க்காமலே முதுகு காட்டிப் போகும் வெங்கொடுமை சாக்காட்டில் தவித்தாள். ஆனாலும், அவன் முதுகை, முகமாக்கும் ஒரே ஒரு லட்சியத்துடனேயே படித்தாள். சத்தம் போட்டு படித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/23&oldid=1404952" இலிருந்து மீள்விக்கப்பட்டது