பக்கம்:பாலைப்புறா.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பாலைப்புறா

‘பணம் தாடா... பணம் தாடா...நானே வாங்கிட்டு வாரேன். ஒனக்கும் எனக்கும் வாங்கிட்டு வாறேன்...’

மனோகரும் வெளியே போய், மாடிச் சுவர் வழியாய் எட்டிப் பார்த்துவிட்டு, உள்ளே வந்தான். வாய் பிளந்து கிடந்த சூட்கேஸின் மேல் பகுதியின் அடிவாரத்தில் உள்ள ஜிப்பை திறந்தான். ஒரு நோட்டுக் கட்டை எடுத்து எஸ்தரிடம் நீட்டினான். அதற்குள் அன்புமணியும் நித்தியகுமாரும் உள்ளே வந்தார்கள். இன்னும் கண் விழிக்காமல், தூங்காமல் தூங்கி சுகம் பெறும் சசிகுமார், சேகர் வகையறாக்களை உசுப்பி விடப் போனார்கள். இதற்குள் எஸ்தர் படபடத்தாள். அன்புமணியின் காலில் விழுந்து, அவன் முட்டிக்கால்களைகட்டிக் கொண்டு, முகத்தைத்துக்கி பாம்பு மாதிரி பற்றிக் கொண்டு, பிச்சைக்காரியாய் கெஞ்சினாள்...

‘போட்றா... போட்றா... ஊசி போட்றா”

அன்புமணி செயல்படும் முன்பே, ஒரு அழைப்பு மணிச் சத்தம்... முதலில் மென்மையாய், அப்புறம் முரடாய்... பிறகு கதவு தட்டப்பட்டது. உருமி மேளமானது. உடையப்போனது.

அன்புமணி கண்ணசைப்பில், நித்தியகுமார்கதவைத் திறந்தான். உள்ளே ஒரு கும்பல் தாவி வந்தது. இடுப்பில் ரிவால்வரோடு ஒரு நட்சத்திர காக்கிச் சட்டைக்காரர். தோள் பக்கம் கோடுகள் போட்ட நான்கைந்து லத்திக்கம்புக் காரர்கள்.

அந்த போலீஸ் அதிகாரி, வாய் மூடாத சூட்கேஸ் பக்கம் போன போது, மனோகர், சும்மா இருந்திருக்கலாம்... காட்டுக்கத்தலாய் கத்தினான்.

‘அய்யோ... என் ரூபாய், அய்யோ.. .என் ஒரு லட்சம்...’

அந்த சூட்கேஸை காலால் இடறப் போன இன்ஸ்பெக்டர், அதைக் கையால் பற்றினார்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/228&oldid=635672" இலிருந்து மீள்விக்கப்பட்டது