பக்கம்:பாலைப்புறா.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 231

கலைவாணி, சந்திராவை நினைத்து, அவள் அம்மாவைக் கழித்தாள். பிறகு மீண்டும் முக்காலியில் ஏறப் போனாள். சந்திரா, அந்த முக்காலியை தூக்கிப்பிடித்தபடியே கேட்டாள்.

‘நீ என்தங்கைமாதிரியம்மா... வேலைக்காரி இல்ல’

‘தங்கை தான் இந்த மாதிரி வேலைகளை செய்வாள். வேலைக்காரி எங்கே செய்வாள்?”

“எங்கம்மா... பேசுறதை பெரிசாஎடுத்துக்காதம்மா... இது மென்டல்...”

‘நம்ம அம்மான்னு சொல்லுங்க”

“அப்படின்னா...அக்காவும், தங்கையோடவீட்டு வேலையை கூடமாட செய்யலாம் பாரு’

கலைவாணி தடுக்கும் முன்பே, சந்திரா கைபிடித்த முக்காலியை கீழே வைத்துவிட்டு, அதில் ஏறிநின்றாள். கீழே நின்றவளிடம் இருந்து, ஒட்டடைக் கம்பை வலுக்கட்டாயமாக வாங்கப் போனாள். இடையிடையே, சமையலறை வாசல்வழியாக எட்டிப்பார்த்தராசலட்சுமி, இனிப் பொறுத்தது போதும் என்பது போல கூடத்திற்கு வந்து கத்தினாள்.

‘ஏய்... சந்திரா கீழே இறங்கு.. ஒனக்கு ஏன் இந்த தலையெழுத்து... கலைவாணி, ஒனக்காவது புத்தி வேண்டாம். ஆஸ்பத்திரி, நோயாளியின்னு அல்லாடுறாள். வீட்லதண்டச்சோறாசாப்பிட்டுட்டு இருக்காள்?”

கீழே குனிந்து துடைப்பத்தை எடுக்கப் போன கலைவாணி, துடைப்பத்தையும் எடுக்காமல், மேலேயும் நிமிராமல், இடைப்பட்டு நின்றாள். அம்மாவின் பேச்சில் உள்ள உட்பூச்சை புரிந்து கொண்ட சந்திரா, ஏறி நின்ற முக்காலி அங்கும் இங்குமாய் ஆடும்படிக்கத்தினாள்.

‘எம்மா... ஒங்களுக்கு கொஞ்சமாவது மேனேர்ஸ் இருக்குதா...? மொதல்ல, பிறத்தியார் மனசை நோகடிக்காம பேசுறதுக்கு தெரிஞ்சிக்கணும்”.

டாக்டரம்மாவின் தாய்க்காரி, முணுமுணுத்தபடியே, மீண்டும் சமையல் வாசம் செய்யப் போய்விட்டாள். சந்திரா, கலைவாணியை நோட்டம் போட்டுப் பார்த்தாள். அவளோ, தான் இயல்பாக இருப்பதாய் காட்டிக் கொள்ளவோ என்னவோ, ஒரு சிலந்தி வலையை நான்கைந்து பூச்சிப் பிணங்களோடு, துடைப்பத்தால் கீழே தட்டிப் போட்டாள். ஆணி கழன்ற சுவர்ப் பொந்துகளில் அப்பிக் கிடந்த பூச்சிகளை, கீழே தட்டிவிட்டாள். ஆனாலும் அவற்றை, துடைப்பத்தில் பின் முனையில் அடித்துக் கொல்ல யோசித்தாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/231&oldid=635676" இலிருந்து மீள்விக்கப்பட்டது