பக்கம்:பாலைப்புறா.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 235

நின்ற இடத்திலேயே நிற்கும் முயல்குட்டிபோல் நின்றாள். உடல் முழுவதும் உறைந்து போனது. காதுகள், கண்ணுக்கத் தெரியாமல் மூடிக் கொண்டன. ஏதோ ஒன்று, வாளிலும் வலிமையாய், மனதை அறுத்து அறுத்து, ரணமாக்கிக் கொண்டிருந்தது.

இதற்குள், ராசலட்சுமி விழித்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த ஹெச்.ஐ.வி. பற்றி தெரியப்படுத்த வேண்டும் என்று புதுடில்லி பயிற்சி முகாமில் கூறப்பட்டதற்கு ஏற்ப, சந்திரா அம்மாவிடம் எய்ட்ஸ் பற்றி முழுமையாக எடுத்துச் சொல்லி இருந்தாள். எய்ட்ஸ் வேறு... ஹெச்.ஐ.வி. வேறு. என்று எடுத்துரைத்திருக்கிறாள்... ரத்தம் தவிர்த்து, தொட்டாலோ, பட்டாலோ, பழகினாலோ அது தொற்றாது என்றும் சொல்லி இருக்கிறாள். அப்போது தலையாட்டிவள்தான் இந்த அம்மா! ஆனாலும், இப்போ பாதிக் கிணறுதான் தாண்டினாள்... அதுவும் முன் பாதி...”

ராசலட்சுமி, கலைவாணியை கண்கொத்திப்பாம்பாய் பார்த்தாள். பீடை ஒழியுது என்பது மாதிரி சந்தோஷமாகக் கூடப் பார்த்தாள். அவள் குன்றிப் போய் நிற்பதை, தனக்கு விடப்பட்ட சவாலாக நினைத்தாள். இந்த பத்து நாளைக்குள், தனக்கும் ஏதாவது ஆகி இருக்குமோ என்று சந்தேகமாகக் கூட தன்னைப் பார்த்தாள், பிறகு கலைவாணியின் பக்கமாய் நடந்து, எச்சரிக்கையான இடைவெளியில் நின்றபடியே கேட்டாள்.

‘எவ்வளவு நாளாடி... எங்க குடியைக் கெடுக்க திட்டம் போட்டிருக்கே... ஒனக்கு வந்தது எங்களுக்கு எதுக்கடி வரணும்? வெளியே போடி... போயும் போயும் என் மகள்தானாடி... ஒனக்கு கிடச்சாள். போடி வெளியே...”

கலைவாணி, சந்திராவை மருண்டு பார்த்தாள். அதற்குள், சந்திரா கலைவாணியின் முன்னால் போய் நின்று கொண்டு, சபதமிடுவது போல் பேசினாள்.

“கலைவாணி இங்கதான் இருப்பாள்... என்னோடதான் இருப்பாள்’

ராசலட்சுமி, சிறிது விக்கித்து நின்றாள். சந்திராவை, வெறித்துப் பார்த்தாள். அண்ணன் மகனை மெளனமாக நோக்கினாள். கீழே வைத்த சூட்கேசைத் தூக்கிக் கொண்டு நின்றவனைப் பார்த்து, தீர்மானமாகச் சொன்னாள்.

‘அஞ்சு நிமிஷம். பொறுப்பா.. கட்டுறதுக்கு மாற்று சேலை எடுத்துட்டு, நானும் ஒன்னோடயே வாறேன். அப்பவே காப்பாத்துன அண்ணன், கடைசிக்காலத்துலயுமா காப்பாற்றமாட்டார்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/235&oldid=635680" இலிருந்து மீள்விக்கப்பட்டது