பக்கம்:பாலைப்புறா.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 243

ஒரு மூன்று வயதுக்குழந்தை. அசோகனை பார்த்து ‘மா.... மா...சாக்லேட் மாமா என்றது. ஒரு பழுத்த நோயாளி, வாயை அங்குமிங்குமாய் ஆட்டினார். பேச முடியாமல் சைகை செய்யவும் திராணியுற்று, அசோகனைப் பார்த்து உதடுகளை அபிநயமாய் ஆக்கிக் காட்டினார்... என்ன சொல்ல நினைத்தாரோ... ஏது சொல்ல எண்ணினாரோ... ஒரு நாற்பது வயதுக்காரர், மல்லாக்கக் கிடந்தார். அசோகனைப் பார்த்துவிட்டு, நாக்கை நீட்டி, கீழ் உதட்டுக்குப் பின்னால் தொங்கப்போட்டுக் காட்டினார். உள்ளே ஒரே காளான்மயம்... உமிழ்நீர் இறங்காத அடைப்பு. அசோகன் பக்கத்தில் நின்று வார்ட் பையனிடம், குளுகோஸ் ஏத்துப்பா! தினமும் ஏத்து... இப்படியா பட்டினி போடுறது என்ற போது, அந்த நோயாளி விக்கினார்... ஒலி கிடைக்காமல் திக்கினார்...

அங்கே கிடந்த அத்தனைபேருமே, பெரிய பெரிய மருத்துவமனைகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள். இரவோடு இரவாக, குப்பைத் தொட்டிகள் பக்கமும், கழிவறைகள் பக்கமும் கழிக்கப்பட்டவர்கள். வீடிருந்தும் முகவரி அற்ற முகங்கள்; உயிருள்ள பிண்டங்கள்

இதற்குள், அசோகன் விழி பிதுங்கி மல்லாக்கக் கிடந்தவனின் கட்டில் அடிவாரத்தைப் பார்த்தான். மீன் செதிள்கள் மாதிரியான சதைப் பிய்ப்புகள்... ரத்தக் கலவைகள்... உடனே அசோகன் ஒரு வார்ட் பையனின் உதவியோடு அந்த உருவத்தைக் கவிழ்த்துப் போட்டான். முதுகில் ஒரே ரணக்காடு. மாதக்கணக்கில் படுக்கையில் மல்லாந்து படுத்ததால், அந்த படுக்கை கூட அந்த உருவத்தை அரித்துவிட்டது. அசோகன், அந்த வார்ட் பையனை கோபமாய்ப்பார்த்தான். வயதான ஆயாவை ஆத்திரமாய் பார்த்தான். ஆனால், திட்டவில்லை. ஒடிப் போவதற்கு சாக்கு தேடிக் கொண்டிருப்பவர்கள்... வார்ட் பையன், முன்பு கழிவறை கழுவியவன். ஆயா, அவன் அம்மா... இதனால்தான் இங்கே இருக்கிறார்கள்...

டாக்டர் சுமதி, அந்த நோயாளிகளைப் பட்டு படாமலும் பார்த்தாள். அவளையும் மீறி அசோகன் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டன. ஆனாலும் ஒரு ஆசை... இந்த எய்ட்ஸ் நோயாளிகளை தான் கவனிப்பது போல் ஒரு வீடியோபடம் எடுத்தால், வெளிநாட்டில் போட்டுக் காட்டலாம். மேலும் ஏழெட்டு ஒர்க்ஷாப்புக்கள் கிடைக்கும். ஒரு வேளை, உலக சுகாதார நிறுவனம் அவளையே ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்தச்சொல்லலாம்... இதனால், இந்தியாவிற்கு வெளிச்செலாவணி கிடைக்கும்... நமது பேலன்ஸ் ஆப் பேமென்டில் ஒரு ஆக்கப் பூர்வமான தாக்கம் ஏற்படும்... இந்த விஷயத்தைச் சொன்னால், இந்த கிராக்கு ஏடாகூடமாய்க் கேட்டு. எய்ட்ஸ் நோயாளிகளை... வியாபாரப் பொருளாக்கலாமா என்று கூட முகத்தில் அடித்தாற் போல் கேட்கக் கூடியவன். ஆனாலும் இந்த நோயாளிகளும், இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/243&oldid=635689" இலிருந்து மீள்விக்கப்பட்டது