பக்கம்:பாலைப்புறா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 25

கூட்டங்களை நடத்தியும், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியும் காட்டியது நினைவுக்கு வந்தது. உலக வங்கி கொடுத்த கடன்கள் உருப்படியாய் மாறுகின்றனவா என்பதை, அதிகாரிகளை நம்பி பார்வையிட வந்த உலக வங்கி திட்ட மேற்பார்வையாளர் மேடம் நிச்சிலை குளிப்பாட்ட நினைத்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், நேரு மையத்தை அணுக, அந்த மையம் தன்னை அணுக, கோலம், கும்மி, கரகம், காவடி என்று கலைநிகழ்ச்சி நடத்தி, அதில் மேடம் நிச்சிலும் முதன்மை விருந்தினராய்க் கலந்து, தன்னைப் பாராட்ட, அப்போது பார்த்து, தான் வெள்ளையன்பட்டி பெண்கள் பிரசவத்துலேயே செத்துப் போவதைப் பெயர் பெயராய்ச் சொல்லிவிட்டு, பிரசவ மருத்துவமனை கேட்க, மேடம், நிச்சில், கலெக்டர் காதைக் கடிக்க, அவர் ஏதோ சொல்ல, இந்த நிச்சில் இன்னும் பேச, கலெக்டர் அதே இடத்துலேயே பத்து லட்சம் ரூபாய் சாங்ஷன் ஆகும் என்று அறிவிக்க, ஒரே கைதட்டல். அப்புறம் பின்னால்... தன்னை அவர் கோபித்துக் கொண்டாலும், சாங்ஷன் என்னமோ சாங்ஷன்தான்... இந்த கோபம், இன்னும் அவருக்குப் போகவில்லை. இந்த விழாவிற்குத் தலைமை வகிக்கக் கூப்பிட்டால், ‘பி.ஏ.’ மூலம் பேசி, துரத்தி விட்டார். அநேகமாய் ஒரு வருடத்திற்குள் மருத்துவமனைக் கட்டிடம் ரெடியாகிவிடும். இந்த ஏப்ரலில் துவங்கிவிட்டதால், அடுத்த மார்ச்சுக்குள் முடிந்துவிடும். அப்போதுதான் உலக வங்கி, மீண்டும் உதவிக்கு வரும். இந்த மருத்துவமனையில், குடிசைக்குள் துடித்த வாடாப்பூ, குறைப் பிரசவமான பூவம்மா... எல்லோரும் இன்னொரு குழந்தை பெறலாம்... ‘நானே கூட இங்கே வந்து பிள்ளை பெறலாம்.’

கலைவாணி, தன்னைக் கட்டிக்கப்போகும் மனோகரின் தங்கை மீராவை நாணத்தோடு பார்த்தாள். அந்த மீராவோ, உள்ளே நின்று கொண்டிருக்கும் பலராமனை குரலால் இழுக்க முயற்சித்தாள்;

"மிஸ்ஸுன்னா செல்வி, மிஸ்ஸஸ் என்றால் 'திருமதி’, எம்எஸ், என்றால் புரியலியே, கலைவாணி அண்ணி கொஞ்சம் சொல்லுங்களேன்!”

‘ஒரு பெண் கல்யாணம் செய்யாவிட்டால் மிஸ்; செய்தால் மிஸ்ஸஸ்; செய்தாலும் செய்யாவிட்டாலும் எம்எஸ். கல்யாணம் ஒருத்தியோட சொந்த விவகாரம். இதுல தலையிட எவருக்கும் உரிமை இல்லை என்கிறதை, சொல்லாமல் சொல்லிக் காட்டும் பெண் விடுதலையின் முதல் கட்டம்’

சீனியம்மாவுக்கு, மகளின் பேச்சு பெருமையாகவும் இருந்தது. அதே சமயம் பயமாகவும் இருந்தது.

“ஏ... பொண்ணுங்களா இவளை விட்டுடுங்கடி..., ஒரு மாதத்தில மெட்ராஸ் போறவள். மாப்பிள்ளை பையன் தப்பா நினைக்கப்படாது பாரு".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/25&oldid=1404954" இலிருந்து மீள்விக்கப்பட்டது