பக்கம்:பாலைப்புறா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 பாலைப்புறா

சாப்பிட்டு முடித்து விட்டு, போகும் போது கூட ஏறிட்டுப் பார்க்காமல், சுவரில் சாய்ந்த அடையாள முத்திரைகளோடு முதுகைக் காட்டி வெளியேறும் பலராமனின் கன்னத்தில் இரண்டு அடி போடுவது போல் மானசீகமாய் அனுமானித்துக் கொண்டே மீரா, கலைவாணியின் அம்மாவுக்கும், பதிலளித்தாள்.

“எங்கண்ணா ஒண்ணும் காட்டான் இல்லை. ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சுக்காத மண்டு இல்ல. எங்கண்ணா ரசிகர், கலையண்ணி எது செய்தாலும் ரசிப்பார்".

வாடாப்பூவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.

‘அது என்னடி. தப்பு தப்பு... அதென்னம்மா எது செய்தாலும்..., என்னது அந்த எது...?’

எல்லாப் பெண்களும் சிரித்து விட்டார்கள். மீரா அழப்போனாள். அனைவரும் அவள் கேலி தாங்க முடியாமல் அழப் போவதாய் அனுமானித்து, அடக்கிச் சிரித்தார்கள்.சீனியம்மா எழுந்து, கதவோடு கதவாக நின்ற மீராவை இழுத்து, தன் பக்கம் உட்கார வைத்தாள். அவள் விபரம் தெரியாமல் விழித்தபோது, சீனியம்மாவே விளக்கம் சொன்னாள்.

"பேசுறதுக்கு முன்னால யோசித்துட்டுப் பேசணும். அவளுக எதுக்கு சிரிக்காளுக தெரியுதா?”

மீராவுக்கு பாதிதான் புரிந்தது. பலராமனிடம் போன உள்ளத்தை இழுத்துப் பிடித்தபடியே தலையைத் தட்டி யோசித்தாள். இதற்குள், இவளைவிட ஒரு வயசு குறைந்த சல்வார் கமிஸ் மஞ்சுளாவுக்கு ஒரு ஆசை. தனக்கும் பேசத் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வதில் அலாதி ஆசை.

‘இந்த மருத்துவமனை பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனால மகளிர் பிரசவ மருத்துவமனைன்னு பேர் வச்சிருக்கணும்’

“ஒன் மண்டையிலே மசாலா இருக்குதா? பிரசவ ஆஸ்பத்திரியில் ஒன் அப்பனாவந்து பிள்ளப் பெறுவான்"

“அப்படி இருந்தால், ஊர்க்காரனுக இந்நேரம் நாலடுக்கு ஆஸ்பத்திரியே கட்டி இருப்பாங்க.”

இதற்குள், இதுவரை வாய் திறக்காத 'மேலத் தெரு' தர்மராசாவின் புதுப் பெண்டாட்டிக்கு ஒரு ஆவல்; கேட்டே விட்டாள். வாடாப்பூவும் பதில் சொல்லிவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/26&oldid=1404955" இலிருந்து மீள்விக்கப்பட்டது