பக்கம்:பாலைப்புறா.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 263

ஏற்ற இறக்கமாக வைத்துக் கொண்டு விளக்கினாள்.

‘இது தொலைவான இடங்களில் இருந்து இங்கே கவுன்சலிங் வருவோர்க்கு குடில்கள்கட்டும் இடம். இது... கண்டதையும் கேட்டதையும் தீர விசாரித்து காட்சியாக்கும் வீடியோ தியேட்டர்... அது எய்ட்ஸ் நோயாளிகளோடு, நான் உட்பட எல்லோரும் உணவருந்துவதற்கான பொது உணவுக்கூடம். இது ஹெச்.ஐ.வி. நோயாளிகளை சொந்தக்காலில் நிற்க வைப்பதற்கான பல்வேறு பயிற்சிப்பட்டறைகள்... ஒயர் கூடை பின்னுதல், மின்சாரகாயல் செய்தல்... ஜெம் கட்டிங்... பேட்டரி ஸெல் செய்தல்... டெய் லரிங்... இது கம்ப்யூட்டர் டிரெயினிங் சென்டர். இது பிரிண்டிங் பிரஸ்...’

அந்த வெள்ளைக்காரர்கள் மூவரும், இப்போது இருக்கைகளிலே குதித்தார்கள். உடனே டாக்டர் சுமதி, ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் தான் வெளியிட்ட விளம்பரத்தைக் காட்டினாள். அது, இந்துவிலோ, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிலோ வரவில்லை... ஏதோ ஒரு போணியாகாத ஆங்கிலப் பத்திரிகை... பணியாற்ற ஆட்கள் தேவையாம்... எய்ட்ஸ் கிருமி பிடித்த இளைஞர்கள், யுவதிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமாம்...

அந்த வெள்ளைக்காரர்களுக்கு, ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சர்யம்... இப்படி ஒரு பரோபகாரியா... இப்படி ஒரு தன்னலமறுப்பு தியாகியா... புத்தரும் சித்தரும் மகாத்மாவும் அவதரித்த, இன்டியா இன்டியாதான்.

அந்தப் பெண்களில் வயதானவள், இருபக்கமும் இருந்த சகாக்களின் காதுகளைக் கடித்தாள். உடனே நாசூக்கு தெரிந்த சுமதி எழுந்து, அந்த அறையின் முன்பக்கமாக வந்தாள். கலைவாணி அங்கே நிற்பதை, அப்போதுதான் பார்த்திருக்க வேண்டும். அவளை வெளியே போகும்படி கையசைக்கப் போனாள்... அதற்குள், அந்த வெள்ளைக்காரர்கள் அங்கே வந்து, அருகே உள்ள சோபா செட்டில் உட்கார்ந்தார்கள்... டாக்டர் சுமதி கலைவாணியை கண்டுகொள்ளவில்லை... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி ஆகிவிடப்படாதே...

வயதான மாது பேசப் போனாள். இவர்கள் கனடா நாட்டுக்காரர்கள். அங்கு ஒரு கோடானகோடீஸ்வரர், எய்ட்ஸ் நோயால் இறந்து போனாராம்... ஆனால் இறக்கும் முன்பு, சொத்துக்களை ஒரு டிரஸ்டாக்கி விட்டார். இந்த டிரஸ்ட், இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் உதவிக்கு ஒட வேண்டும் என்றும் உயில் எழுதிவிட்டார். இந்த உயில் ஆணையை நிறைவேற்றவே, இவர்கள் அந்த டிரஸ்டின் சார்பில் இந்தியா வந்திருக்கிறார்கள். அந்த வெள்ளைக்காரம்மா கேட்டாள்.

‘டாக்டர் சுமதி... இந்த புராஜெக்டுக்கு எவ்வளவு செலவாகும்...” “மினிமம். ஒன் குரோர். ஒரு கோடி டாலர். இல்ல ரூபா...”

“நாங்க எவ்வளவு கொடுக்கணும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/263&oldid=635711" இலிருந்து மீள்விக்கப்பட்டது