பக்கம்:பாலைப்புறா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 பாலைப்புறா

சால்வை போர்த்தட்டும். வாடாப்பூவும், மீராவும் வரவேற்பு தட்டுல கற்கண்டை ஏந்திகிட்டு, பன்னீர் தெளிக்கணும், இதுல ஒரு ஆணும் இருக்கணும்".

"அதான் முன்னிலைக்குன்னு ஏகப்பட்ட பேரு இருக்காங்களே?”

"இவங்களுக்கும், மாவட்ட சுகாதார அதிகாரிக்கும் நம் கூட்டுச் செயற்குழு உறுப்பினர்கள் மாலை போடுவாங்க. ஒரு ஆண் பேச்சாளர் உள்ளுர் ஆசாமி வேணும்."

"மனோகர் பேசட்டும்".

"அவரு சரிப்படாது. அவருக்கு பதிலாய் நான் பேசறேனே... எந்த விழாவும் ஒரு குடும்ப விழாவா ஆகிடப்படாது".

"அடேயப்பா.. மனசுக்குள்ளேயே குடும்பம் நடத்துற போலுக்கே... நீ இல்லாமல் நம்ம குழு எப்படித்தான் நடக்கப் போகுதோ?”

ஆரம்பத்தில் நாணிக் கோணிய கலைவாணி, பிறகு எதிர்காலப் பிரிவுத் துயரில் இப்போதே சிக்கிக் கொண்டவள் போல் வாயகல இருந்தாள். பின்னர் "எந்த அமைப்பும் ஒரு ஆளை மட்டுமே நம்பி இருக்கப்படாது. இதனால்தான் அமெரிக்கால யாரும் இரண்டு தடவைக்குமேலே ஜனாதிபதி பதவியில இருக்க முடியாது. இங்கே என்னடான்னா நம் தலைவர்களோ இன்னும் பிறக்காத பேரன், பேத்திக்குக் கூட எம்.எல்.ஏ. சீட்டை ரிசர்வ் செய்கிறாங்க. பேச்சு எங்கேயோ போகுது; ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றாள்.

இதற்குள் ஒரு சத்தம்... டெம்போ சத்தம். சாமியானாவையும், பிளாஸ்டிக் நாற்காலிகளையும், கோணச் சத்திரத்தில் ஏற்றி, விழா நடக்கப் போற இடத்துல போட வேண்டிய டெம்போ, இங்கே ஏன் வருது? அங்கே நிற்கிற பூமாரியும், பொன்னம்மாவும் என்ன செய்கிறாளுக? இந்நேரம் பாதிப் பந்தல் போட்டிருக்கணுமே!

எல்லோரும், வெளியே வந்தார்கள். டெம்போ டிரைவரே, கேட்காமல் பதில் சொன்னார்.

"நீங்க சொன்ன இடத்துக்கு போனோம். அங்கே ஒரு கொட்டகை போடுறாங்க. உள்ளே எருமை மாடுகளை கட்டிப் போட்டிருக்காங்க. அடிக்கல்களை பிடுங்கிட்டாங்க; எங்கள வேற அரிவாளோட வெட்ட வந்துட்டாங்க. ஒங்கபட்டிமோசமுன்னு தெரியும், ஆனால் இந்த அளவுக்கு மகா மோசமுன்னு தெரியாது... உயிர்பிழைச்சதே தெய்வாதீனம்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/28&oldid=1404957" இலிருந்து மீள்விக்கப்பட்டது