பக்கம்:பாலைப்புறா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

அந்த டெம்போ, குண்டு குழிச்சாலையில், துள்ளித் துள்ளிக் குதித்து குதித்து ஓடியது. வேலையாட்களோடு, கனகம்மா, சல்வார்கமிஷ் மஞ்சுளா, வாடாப்பூ, மேலத்தெரு பூவம்மா, கீழத்தெரு சொர்ணம் ஆகியோர் பின்பக்கம் இருந்தார்கள். தலைமேல் விழுந்த பிளாஸ்டிக் நாற்காலிகளைச் சுமந்து கொண்டே, செம்மண் புழுதி படலத்திற்குள், டெம்போவை துரத்துவது போல் தலைவிரிகோலமாய் ஓடி வந்த பெண்களைப் பார்த்துக் கையாட்டினார்கள். ஆங்காங்கே ஆட்கள், அதிசயமாய்ப் பார்த்துப் பார்த்துப் பேசிக் கொண்டார்கள். பிடித் தட்டோடு வந்தவர்கள் வாயில், கை வைத்தார்கள். நான்கைந்து பட்டதாரிகள் உடம்பை நெளிக்க அவர்களுக்கு மத்தியில் நின்ற, கலைவாணியின் எதிர்காலக் கணவன் மனோகர், முகத்தை கேள்விக் குறியாக்கிப் பார்த்தான். அவனுக்கு கைகாட்டிய கலைவாணி, டிரைவரை ஆற்றுப்படுத்தினாள். ஒங்களுக்கு ஒன்றும் ஆகாது. வேணுமுன்னால் பாருங்க”

"என்னத்த வேணுமுன்னு பார்க்கம்மா, - பார்க்கறதுக்கு உயிரு இருக்கணுமே! நீங்க உயிர விடலாம்... நியாயம். ஒங்க நியாயத்துக்காக நான் ஏம்மா அநியாயமாய் உயிரவிடணும்".

கலைவாணி, டிரைவரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அந்த வண்டி கிட்டத்தட்ட கடத்தப்பட்டது மாதிரிதான். டிரைவர், டெம்போவை எடுக்கத் தயங்கியபோது, பாம்படக்காரி கனகம்மா, ‘காத்தை பிடுங்கி விடுவோம்’ என்றாள். சக்கரடயர்களை எப்படிபஞ்சராக்கவேண்டும் என்பது தெரியாமல், சல்வார் கமிஸிடம் யோசனை கேட்டாள். உடனே டெம்போ கர்ஜித்தது - பயந்து போய் உறுமியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/29&oldid=1404958" இலிருந்து மீள்விக்கப்பட்டது