பக்கம்:பாலைப்புறா.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288 பாலைப்புறா

ஆணையை நிறைவேற்ற கான்ஸ்டபிள்கள் தயங்கினார்கள். அத்தனை பேருமே அசோகனின் ஒசி நோயாளிகள். அதோடு, இவர் ஒரு கெளரவமான டாக்டர் ...எம்.எல்.ஏ. இன்றைக்கு சொன்னதை, நாளைக்கே மறுப்பான்... சட்டசபையில் அடிபடக் கூடிய விவகாரமாகலாம்...

கான்ஸ்டபிள்களின் தயக்கத்தைப் புரியும் நிலையில் இன்ஸ்பெக்டரும் இல்லை. கூடவே அந்த இரண்டு பெண்களைப் பார்த்ததும், அந்த நாற்பது வயது நட்சத்திரச் சட்டைக்கு, தான் ஒரு சினிமா நட்சத்திரம் என்ற நினைப்போ... என்னவோ... அசோகன் சட்டைக் காலரைப் பிடிக்கும் அளவிற்கு கையைத்தூக்கிவிட்டார். அதற்குள்...

கலைவாணி, அசோகனின் முன்னால் போய் நின்றாள். முகம் வெளுக்க நின்ற சந்திராவை, கையைப் பிடித்து தன் பக்கமாய்ச் சேர்த்துக் கொண்டாள். இப்போது அவளே 'எஸ்.பி.' ஆனது போல், இன்ஸ்பெக்டருக்கு ஆணையிட்டாள்.

"மொதல்ல... அந்த சைக்கிளை தூக்கி நிறுத்துங்க... கீழே கிடக்குற நாற்காலிய உட்காரும்படியாய் போடுங்க. அப்புறமாய் இங்கே வாங்க... இன்ஸ்பெக்டர், ஒங்களைத் தான்..."

இதற்குள், அங்குமிங்குமாய் சிதறி அப்புறம் ஒன்றுபட்ட பெண்கள், அந்தப் பக்கம் தடதடவென்று ஓடிவந்து, கலைவாணியையும், சந்திராவையும், இவர்களுக்கு இடையே நின்ற அசோகனையும் பின்னால் தள்ளிவிட்டு, முன்னால் வந்து நின்றார்கள். முந்தானையை இறுக்கிக் கட்டி, கரங்களை முஷ்டிகளாய் ஆக்கிக் காட்டி, சூளுரைத்தார்கள்.

“மொதல்ல எங்களை சுட்டுட்டுத்தான், டாக்டரை நெருங்க முடியும்..."

இன்ஸ்பெக்டருக்கு லேசான பயம்... கான்ஸ்டபிள்கள் சிரிப்பார்களே என்ற தாழ்வு மனப்பான்மை... ஆனாலும், எம்.எல்.ஏ.விடம் ஒரு புறநானூற்று வீரனாய்க் காட்டிக் கொள்ள இன்னமும் ஆசை. இந்தச்சமயம் பார்த்து, புரமோஷன் பேனல்ல பேர் வேற இருக்குது...

"இந்தாப் பாருங்கம்மா, நான் என் டூட்டியைத்தான் செய்ய வந்திருக்கேன். இவரு... ஒரு லேடியை அவமரியாதையாய்ப் பேசியவரு. கொலை செய்யப் போறதாய் மிரட்டியவரு... விசாரணைக்கு கூப்பிட்டால் வரமாட்டாரு... நான் சும்மா இருக்கணுமா..."

அசோகன், அழுத்தம் திருத்தமாய் பேசினான்... "ஒங்க காக்கிச் சட்டைக்கு, நான் மதிப்பு அளிக்கணுமுன்னால், இப்பவும் சொல்றேன். அந்த இண்டர்நேஷனல் ஃபிராட் சுமதியையும் கூப்பிடுங்க. நேருக்கு நேராய் விசாரியுங்க. நான், நிச்சயமாய் வருவேன். அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/288&oldid=1404884" இலிருந்து மீள்விக்கப்பட்டது