பக்கம்:பாலைப்புறா.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பாலைப்புறா

மனோகர் முண்டியடித்து, அவர்களிடம் ஏதேதோ சொல்லப் போனான். இதற்குள், காக்கிச் சட்டைக்காரர், அன்புமணியையும், மனோகரையும் இணைத்து வைப்பது போல் ஒருவனின் வலது கையையும், இன்னொருத்த னின் இடதுகையையும் இணைத்து விலங்கிட்டார். விலங்கைப்பூட்டிவிட்டு, சாவியை பக்கத்தில் நின்றவனிடம் கொடுத்து விட்டு, அந்த விலங்கின் மூக்கணாங்கயிரான இரும்புச்சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நடங்கடா என்றார்.

மனோகர், ஒதுங்கி நின்ற சகாக்களிடம் மீண்டும் பேசப் போனான். ஆனால், அவர்களோ அந்த இடத்தில் இருந்து எழுந்து, சிறிது விலகிப் போய் உட்கார்ந்தார்கள். விலங்கோடு சேர்த்து, அன்புமணி கையோடு, தன் கையையும் ஆட்டி, அவர்களை கிட்டே வரச்சொன்னான். இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. விலங்கிடப்பட்டவர்களை, கூட்டம் வேடிக்கை பார்க்காமல், காரசாரமாய், கடுமையாய் நோக்கியது. ஒரு சிலர் காக்கிச்சட்டைக்காரரைப் பார்த்து இப்படித்தான் செய்யணும்’ என்று அங்கீகாரம் செய்தார்கள்.

மனோகர், நின்றபடியே செத்துப் போனான். தானும் செத்து, தன் நினைவும் செத்துப் பிணமாகிப் போனான். உயிர் இருக்க, ஆன்மா செத்து, அன்புமணி மீதே சாய்ந்தான். ஒரு காலில் பட்ட ஒரு லத்திக்கம்பு வீச்சுத்தான் அவனை மீண்டும் உயிர்ப்பித்து நடக்க வைத்தது. எவருக்கும் முகம் காட்டவும் மனமில்லை. அந்த முகத்தை, இடது கையால் மறைத்துக் கொண்டான். ஆடுமாடு போல நடந்தான். பார்வையற்றோர்.நடப்பது போல், ஒரு அனுமானத்துடன் நடந்தான். நடத்தப்பட்டான்.

மனோகர், இழுத்துச் செல்லப்பட்ட ஐந்து நிமிடத்தில், விலகி நின்றவர்கள் மீண்டும் கூடினார்கள். ஒரு சிலர், மனோகரைப் பார்த்தால் அப்படிப் பட்டவனாகத் தெரியவில்லை என்று வாதிட்டார்கள். ஆனால், பெரும்பாலோர், தங்கள் பைகளுக்குள் இருந்த பர்ஸ்களைத் தட்டிப்பார்த்துக் கொண்டார்கள். இனிமேல், முன்பின் தெரியாதவர்களை, தக்க ஆதாரங்கள் இல்லாமல் தங்களது கிளப்பில் சேர்ப்பதில்லை என்றும் தீர்மானித்தார்கள். மனோகரைக் கூட்டி வந்து சேர்த்த தாம்பரத்துக்காரன் மேல் எரிந்து விழுந்தார்கள்.

சிறிது நேரத்தில், எஸ்தர் வந்தாள். பழைய பேண்ட் சட்டையாகத்தான் இருக்க வேண்டும். இல்லையானால், இப்படி நைந்திருக்காது. பேன்டின் முட்டிக்கால் பகுதி நூல் பிரிந்து குட்டி ஜன்னலாய்த் தோன்றியது. சட்டைக்காலர் சொந்த நிறத்திற்குப் பதில் வெள்ளைநிறத்தைக் காட்டியது. நைந்து நைந்து நரைத்துப் போனது... இவர்களுக்கு தெரிந்தவள்தான் இவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/302&oldid=635756" இலிருந்து மீள்விக்கப்பட்டது