பக்கம்:பாலைப்புறா.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



டாக்டர் சந்திரா, நோயாளியாய் தவித்தாள்... தனக்குத்தானே, மானசீகமாக மனோதளத்தில், மருந்துகளை எழுதினாள். ஆனாலும், அதைப் படிக்க முடியாமல், அல்லாடினாள். அந்தச் சூழலிலும், அசோகனிடம் யோசனைகேட்கலாமாஎன்று ஒரு அனிச்சையான சிந்தனை. அந்த சிந்தனை அவளுக்கு லேசாய் சிரிப்பைக் கூட கொடுத்தது... ஆனாலும் கோழியா அல்லது முட்டையா என்ற குழப்பம் நின்றபாடில்லை. இருதலைக் கொள்ளி எறும்பு என்பார்களே, அது எப்படி இருக்கும், எப்படி தவிக்கும் என்பது அவளுக்குத் தெரியாது. ஆனாலும் அந்த எறும்பு, தன்னைப் போல், தவித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

விழிப்புணர்வு மையத்திலிருந்து, வீட்டுக்கு வந்த சந்திராவையும் சங்கரனையும், அம்மா வீட்டுக்குள் விடாமலேயே, விரட்டினாள்; ‘அப்படியே நில்லுங்க... கோயிலுக்கு போயிட்டு வரலாம்...’ என்று சொல்லிவிட்டு, உள்பக்கமாக் திரும்பி,தட்டு பழத்தோடு வெளிப்பட்டாள். ‘வராமல் வந்த என் அண்ணன் மகன் வந்திருக்கான். சிவன் கோவிலுல ஒரு அர்ச்சனை செய்யணும். அப்படியே கல்யாணத்திற்கு அய்யர்கிட்ட நாள் குறிச்சுட்டு வரலாம் என்றாள். அவள் வாயில் நீரூற்றாய் தோன்றிய சிரிப்பு முகமெங்கும் பிரவாகமானது... அம்மாவை ஏறிட்டுப் பார்த்த சந்திரா, அப்படியே பார்த்தபடி நின்றாள். அந்த வாஞ்சை, அவளை நெகிழ வைத்தது. கல் பிளந்து காட்டும் வாஞ்சை... அதைப் பார்த்தவுடனேயே அவள் மனம் சங்கரன் பக்கம் தாவியது. அந்தச் சமயம் பார்த்து, ‘அத்தே.. நான் டில்லியிலிருந்து வாங்கிட்டு வந்தேன் பாருங்க, ராஜஸ்தான் பட்டு, அத சந்திராவைக் கட்டிக்கிட்டு வரச் சொல்லுங்க’ என்று, அந்தக் காலத்து மணமகன் போல் நாணிப் பேசினான். அந்த நாணத்தோடு, அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/314&oldid=635769" இலிருந்து மீள்விக்கப்பட்டது