பக்கம்:பாலைப்புறா.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 343

கனகம்மா... அவளைச்சுற்றி சுற்றியே வந்தாள்.

கலைவாணி, தன் மீது மொய்க்கும் ஊர்க் கண்களைப் பார்க்காமலே, அப்படி ஒரு கூட்டம் நிற்பதை அறியாமலே, உள்ளே போனாள். முன்னாள் கணவனைப் பார்த்ததுமே, கண்களை மூடிக் கொண்டாள். அய்யோ... இது என்ன கொடுமை. வாயில் இருந்து சளி ஒழுகல், மண்தரையில் ரத்தச் சளிக்கட்டிகள். அங்கங்கே கொப்புளங்களாகவும், செதில் செதிலாகவும் படை படையாகவும் உள்ள உருவத்தில், மனோகர் எங்கே இருக்கிறார்... அவர் தெம்மாங்கு முகம் எங்கே போனது...? அவர் தேக்குமர மேனி எங்கே போனது... இது மனோவா..? என்னுடைய பழைய மனோவா...? இருக்காது... இருக்கவே இருக்காது.”

கலைவாணி, கண் திறந்தாள். மனதைக் கல்லாக்கி, அவனை, வெறும் நோயாளியாகவே பார்க்கப் போனாள். பார்க்கப் பார்க்க... நோயாளியை மீறி, மனோகரே மேலோங்கிப் போனான். முதலில், அவளை ஏமாற்றி தாலி கட்டிய வஞ்சக மனோகரானான். அப்புறம் எஃகின் உறுதியும், வாழையின் நளினமும் கொண்ட, அந்த அந்தரங்க மனோகர் தோன்றினான். தூக்கத்தில் கூட, கால்களைச்சுருட்டி வயிற்றுக்குள்திணிக்காமல், கம்பீரம் கலையாமல் படுப்பவன்; காலையில் தன்னை முத்தச் சத்தத்துடன் எழுப்புகிறவன், எழ வைப்பவன். என்னை ஏமாற்றியவன்த்ான். ஆனாலும், இவனுக்கு இது நல்லாவேணும் என்று நினைக்க முடியலியே...? மனம் என்பது மாறக் கூடியதா...? அல்லது மாறாத மரச் சட்டத்திற்குள் அடுக்கடுக்கான ரகசிய அறைகளைக் கொண்டதா...?

மனோகரும், கலைவாணியை பார்த்துவிட்டான். உடனே, கண்கள் உருளைகளாகின்றன. வாய் அகல்கிறது. கை லேசாய் மேலோங்கிறது. கன்னமேடுகள் ஈரப்படுகின்றன. மூச்சே குரலாகிறது. குரலே மூச்சாகிறது. வாய்துடிக்கிறது. பற்கள் விலகுகின்றன. வார்த்தைகள்திக்கித்திக்கி, திணறித் திணறி, அவனைப் போல் குற்றுயிரும் குலையுயிருமாய்துடிக்கின்றன.

‘கல்... கலை... நா...நான்...த.. ப்ப.தப்...பு...டேன்... மன்... மன்...”

மனோகர், கலைவாணியை நன்றாகப் பார்க்கட்டும் என்பதுபோல், மருத்துவக் குழு, விலகி நிற்கிறது. அவன் பேசுவதற்கு முயற்சி செய்யச் செய்ய, கவைாணியின் ஐம்பொறிகளும் கலங்குகின்றன. ஆதரவாக, வாடாப்பூவின் மேல் சாய்கிறாள். எஸ்தர், அவள் முதுகைத் தட்டிக் கொடுக்கிறாள். காமாட்சி அவளைப் பிடித்துக் கொள்கிறாள். கனகம்மா கையைப் பிடிக்கிறாள். இப்போது, சீதாலட்சுமி, அங்கே வந்தாள். ஆத்திரமாகவும் அழுதழுதும், கலைவாணியைப் பார்த்து சீறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/343&oldid=635801" இலிருந்து மீள்விக்கப்பட்டது