பக்கம்:பாலைப்புறா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 பாலைப்புறா

எப்படி? ஒங்க ஹெல்த் கண்டிஷன் அப்படி இருக்குது".

"என்னோட ஆரோக்கியத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா டாக்டர்? போன வாராம், சோளிங்கருக்கு பிக்னிக் போனோம். பலர் மலை ஏற முடியாமல் தவித்தபோது, ஒரே மூச்சிலே உச்சிக்குப் போனவன் நான்!”

"ஒங்க ரத்தம் அப்படிச்சொல்லலியே?”

"ஒஹோ, மருத்துவ முகாம் சமாச்சாரமா? என் ஹார்ட் நல்லாயிருக்குதுன்னு நீங்கதானே சொன்னிங்க...!”

‘ஆனால் ரத்தத்தை சோதித்ததில் ஒரு இன்பெக்ஷன்’.

"சரி அதையாவது சொல்லுங்க”.

‘இப்போ சொல்லப்படாது; இன்னொரு டெஸ்ட் எடுத்துத்தான் உறுதி செய்யணும்’.

‘ஓ.கே. நீங்க பாட்டுக்கு உங்க வேலையைப் பாருங்க... நானும் என் வேலைய பார்க்கேன். ஒரு டாக்டரோட கடமை டென்ஷன் கொடுக்கிறது இல்ல. சரியான மென்டல்’.

மனோகர், அப்படிச் சொல்லிட்டு எழுந்தான். பிறகு உதட்டைக் கடித்தான். கல்யாண டென்ஷனில், அவனது ஜென்டில்மேன் பேச்சும், பறிபோய்விட்டது. ஆனாலும் இந்தம்மா அறுக்கிற அறுவைக்கு அதுதான் பதில்.

மனோகர் எழுந்தான். சந்திராவை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, பிறகு முதுகு காட்டி நடந்தான். பிறகு திரும்பி, ‘கல்யாணத்துக்கு கண்டிப்பாய் வாங்க' என்று சொல்லிவிட்டு மீண்டும் நடந்தான்.

டாக்டர் சந்திரா தடுமாறிப் போனாள். கூடவே கலைவாணியின் பளப்பளப்பான முகத்தின் கலகலப்பு, நெஞ்சைக் குத்தியது. அன்று, அவள் வீட்டு விருந்தோம்பலில் ஒரு லட்டுத்துண்டை எடுத்து இவள் வாயில், கலைவாணியே போட்டாள். பிறகு அய்யோ கையக்கடிச்சட்டிங்களே என்று கையை உதறி, பாசாங்கு பயம் காட்டினாள். அவள் வாழ்க்கையை இவர் கடிக்கப்படாது. தங்க ஊசி என்பதற்காக, அதைக் கண்ணில் குத்த முடியாது. போய்க் கொண்டிருந்தவனை நிறுத்துவதற்காகக் கத்தினாள்.

“மிஸ்டர் நீங்க கல்யாணம் செய்யப்படாதுன்னா... செய்யப்படாது. ஏன்னா ஒங்களுக்கு ஹெச்.ஐ.வி. இன்பெக்ஷன் இருக்கிறது மாதிரி தெரியுது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/54&oldid=1405013" இலிருந்து மீள்விக்கப்பட்டது