பக்கம்:பாலைப்புறா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 55

அதுதான் எய்ட்ஸ் கிருமிகள்...ஒங்கரத்தத்தில் ஊடுருவி இருக்குது...’

மனோகர், நின்ற இடத்திலே நின்றான். அவளுக்கு முதுகு காட்டி நின்றான். கீரிக்குப் பயந்து போய், பாம்பு காட்டுமாமே... பின் தலையை அப்படி, நின்ற இடத்திலேயே உறைந்து போனான். கால்கள், தரையில் பதியம் போட்டது போல், அசைவற்று நின்றன. தரையில் காலே வேரானது போன்ற மனித மரமாய் நின்றான். ஆலமரமாய், அரசமரமாய் அல்ல. கள்ளி மரமாய்... கருவேல மரமாய்... 'எனக்கா? எய்ட்ஸ் எனக்கா? இருக்காது.... இருக்கவே இருக்காது’.

மனோகர், மெள்ள மெள்ள, உடல் திருப்பினான். அவனைப் பார்க்க சங்கடப்பட்டு, வேறு பக்கமாய் முகம் திரும்பியவளை ஒட்டு மொத்தமாய்ப் பார்த்தான். எய்ட்ஸைப் பற்றி பொத்தாம் பொதுவாய், அரைகுறையாய் தெரிந்து வைத்திருந்தவன், எல்லோரையும் போல் அதை எள்ளி நகையாடியவன்தான். ஆனால், டாக்டர் அசோகன், வெள்ளையன்பட்டி மருத்துவமுகாமில், படம்படமாய் போட்டுப் பேசியதில் இருந்து, ஒருநாள் வரை தூக்கமற்றுப் போனவன்... தனக்கு வரும் என்று அல்ல... எத்தனைபேர் தவியாய் தவித்து, துடியாய்த் துடிக்கிறார்களோ என்ற மனித நேயத்தில்... ஆனால், இன்று, இந்தக் கணத்தில், கண்களை மூடிக் கொண்டான். கற்பனையும் கற்பிதமும், தானாய் அவன் மனதை வரித்துக் கொள்கின்றன.

டாக்டர் அசோகன் விளக்கியதுபோல், உடலின் ஒரு அணுவின் லட்சக் கணக்கான மடங்கு சிறிய இந்த அற்ப ஹெச்.ஐ.வி. கிருமிகள், அற்புதமான உடல் கட்டமைப்புக்குள் ஒடும் ரத்தத்திற்குள் ஊடுருவி, வெள்ளை அணுக்களின் தளபதி அணுக்களில் குடிகொண்டு பல்லாயிரத்து பல்லாயிரமாய்ப் பல்கிப் பரவுகின்றன. இதோ யுத்தம் நடக்கிறது. இதில் எறும்பு ஊர, இரும்பும் தேயும் கதையாக, சிற்றுளி மலையை உடைக்கும் யதார்த்தமாக, இந்தக் கிருமிகள், மத யானைகள் போன்ற காவல் வீரர்களான வெள்ளை டி.நான்கு தளபதி அணுக்களை சிறுகச் சிறுகக் கொல்கின்றன. இதிலும் திருப்தி அடையாமல், இதோ அவன் உடம்புக்குள் ஊடுருவல்... பாரசைட் கிருமிகளைத் திறந்துவிட்டதால் அவனுக்கு மனிதக்கால், யானைக்காலாகியது. பங்கஸ் கிருமிகளை ஆடவிட்டு, அவனை தொழு நோயாளியாக ஆக்கிக் காட்டுகின்றது. பாக்டீரியா கிருமிகளை படரவிட்டு, நிமோனியாவில் எரிய வைக்கின்றன. மூளைக்குள்ளும், இந்த புத்திசாலிகள் ஊடுருவி, அவனுக்கு ஒரு கையும், காலும் விழுகின்றன. கக்குவான் பிடிக்கிறது. தொண்டை எங்கும், வாய் எங்கும், வெள்ளை வெள்ளையாய், ஏதோ ஒன்று ஆக்கிரமித்து, எச்சிலைக் கூட விழுங்க முடியாத கொடுமை. டாக்டர் அசோகன் குறிப்பிட்டதுபோல், இல்லாதவனின் ஏழைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/55&oldid=1405014" இலிருந்து மீள்விக்கப்பட்டது