பக்கம்:பாலைப்புறா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 பாலைப்புறா

பெண்டாட்டி எல்லோருக்கும் பெண்டாட்டி என்பது மாதிரி, வெள்ளை அணுக்கள் இல்லாத அவன் உடம்பை, நான்கு வகைக்குள் அடங்கும் ஆயிரக் கணக்கான ரகரகமான கிருமிகள் ஆக்கிரமிக்கின்றன. ஆக மொத்தத்தில் யானைக்கால் குஷ்டரோகியாய், ஒரு கை ஒரு கால் விழுந்தவனாய், பெரியம்மை பட்டு பார்வை அற்றவனாய், உப்பளம் போன்ற கொப்பளக்காரனாய், மலேரியா தூக்கிப் போட, சயரோகம் ரத்தம் ரத்தமாய் வெளிப்பட, குடலைப் புற்றுநோய் தின்று தீர்க்க, உற்றார் பெற்றோர் விலக, மருந்தற்றுப் போனதால், மரணம் நிச்சயமாகி, சிறுகச்சிறுக, பல்லி கவ்விய பாச்சானை, அந்த பல்லியைக் கெளவிய பாம்பாய், பாம்பைத் தூக்கிய கழுகாய், ஒரு உறுப்பை இன்னொரு உறுப்புதின்ன, அப்படியே கிடக்கிறான். அநாதையாய்க் கிடக்கிறான். பறவைகள் கொத்த வருகின்றன. நாய்கள் மோப்பம் பிடித்து கிட்டே வருகின்றன.

‘நோ... நோ... நோ...’

மனோகர் வீறிட்டுக் கத்துகிறான். கண்களைத் திறக்கிறான். மெள்ள மெள்ள பார்வை வருகிறது. காலை ஆட்டுகிறான். நடக்க முடிகிறது. எச்சிலை விழுங்குகிறான். உள்ளேபோகிறது. உடம்பைப் பார்க்கிறான். ஒரு மரு கூட இல்லை. இல்லவே இல்லை. ஒரு நிமிடத்தில், ஏழாண்டு கால உச்சக் கட்டத்தைத் தாண்டி, மறு நிமிடம் பிழைத்துக் கொள்கிறான். டாக்டர் சந்திராவை, அச்சுறுத்துவதுபோல் பார்க்கிறான். அதே சமயம், முற்றிய எய்ட்ஸ் நோயாளிகள் எப்படி இருப்பார்கள் என்று டாக்டர் அசோகன் போட்டுக் காட்டிய விதவிதமான ஸ்லைட் படங்கள், அவனைப் பேயாய்ப் பிடித்துக் கொள்கின்றன.

டாக்டர் சந்திரா, அவனருகே வருகிறாள். அவன் முதுகைத் தட்டிக் கொடுக்கிறாள். உபதேசிக்கிறாள்.

‘ரமணரிஷிக்கும் புற்று நோய் வந்தது. ராமகிருஷ்ணபரமஹம்சருக்கும் அதே நோய், விவேகானந்தருக்கு பிளவை; இந்த மகான்கள், தங்களுக்கு வந்த நோய்களை ஏளனமாய் பார்த்தார்கள். போனால் போகிறது என்பதுபோல், எமனுக்கே அடைக்கலம் கொடுத்தார்கள்.’

மனோகர்...பைத்தியமாய்க் கத்தினான்.

‘எனக்கு எய்ட்ஸ்.... எல்லா நோயையும் விடக் கொடிய நோய்.... அப்போது நான் மனோகர் அல்ல, மகான் நல்லாயிருக்குது டாக்டர்’.

டாக்டர் சந்திரா பயந்து விட்டாள். இதுதான், அவள் முதல்தடவையாக கையாளும் எய்ட்ஸ் கவுன்சலிங். ஆழந்தெரியாமல் காலைவிட்ட கதை...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/56&oldid=1405015" இலிருந்து மீள்விக்கப்பட்டது