பக்கம்:பாலைப்புறா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 57

‘இப்போ கூட குடி முழுகிடல மனோகர்... உறுதிப்படல. வெறும் சந்தேகந்தான். இரண்டாவது டெஸ்டுதான் இறுதியானது; ஒங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லாமல் கூட இருக்கலாம்.’

"அப்... அப்போ மூன்று மாதத்திற்குப் பிறகு சொல்லி இருக்கலாமே!”

‘அதுதான் சரியானது... ஒங்களுக்கு, அடுத்தவாரம் கல்யாணம் நடத்த நிச்சயம் செய்யாமல் இருந்தால், இதைப் பற்றி மூச்சு விட்டிருக்கக்கூட மாட்டேன். இதுல கலைவாணியோட வாழ்க்கையும் அடங்கியிருப்பதால், நான் சொல்லும்படியாய் ஆயிற்று... பெண் என்கிற முறையில், இன்னொரு பெண் - அதுவும் ஒரு அப்பாவிப் பெண், பாழாகிடப்படாதேன்னு பயந்து சொன்னேன். ஒங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதுக்கு எனக்குக்கூட மனசு கேட்கல. பாவம் கலைவாணி’

பொறி கலங்கி நின்ற மனோகரின் மூளையில் ஒரு பொறி - எதற்கு எடுத்தாலும் கலைவாணிதானா? என்னைப் பார்க்க, இவளுக்குப் பாவமாய் இல்லியா? இருக்காது. ஏன்னா இதில் ஒரு சூழ்ச்சி தெரியுது. பக்குவமாய் கேட்போம்.

‘டாக்டர், எனக்கு எய்ட்ஸ் கிருமிகள் இருக்கிறதை காட்டும் டெஸ்ட் ரிசல்ட் ரிப்போர்ட் இருக்குதா? பாதிக் காகிதத்தில் என் பெயரை கருப்பு மையிலும், ஹெச்.ஐ.வி. ஆன்டிபாடி பாஸிட்டிவ் என்று சிவப்பு மையிலும் எழுதின ரிப்போர்ட்; இது எப்படித் தெரியும் என்கிறீங்களா? அன்றையக் கூட்டத்தில் டாக்டர் அசோகன் பேசுனதை ஒரு வார்த்தைக்கூட விடாமல் கேட்டேன். ரிப்போர்ட்ட காட்டுறீங்களாடாக்டர்...?’

‘இன்னும் அதிகாரபூர்வமாய் அனுப்பல சார். எனக்கு அனுப்புவாங்களான்னும் தெரியாது. மாவட்ட மருத்துவமனைக்கு, வேற ஒரு விஷயமாய் போயிருந்தப்போ, தற்செயலாய் ஒங்க ரிப்போர்ட்டைப் பார்த்தேன்’

மனோகருக்கு லேசாய் தெம்பு; மனதில் தெளிவு, மூச்சு சீரானது; இவள் ஏமாற்றுகிறாள். சர்டிபிகேட் இல்லாமலே சாகஸம் செய்கிறாள். இது ஒரு சூழ்ச்சி. பயங்கரமான சூழ்ச்சி; அந்தக் கேடு கெட்ட கலைவாணியும், இந்த சந்திராவும் விரித்த வலை. கல்யாணப் பேச்சுவந்தபோது அழுததாய், அதுவும் ஒரு நாள் முழுக்க அழுததாய், அவளே ஒப்புக் கொண்டாள். கல்யாணம் பிடிக்கவில்லை என்பதும், கல்யாண மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதும் ஒன்றுதான். ஊர் சுற்றவும், கண்டவர்களோடு பல்லைக் காட்டவும், படிப்படியாய் தலைவியாகவும், இந்தத் திருமணம் தடையாய் இருப்பதாய் அவள் நினைத்து, இந்த சூழ்ச்சியில் இறங்கிவிட்டாள். இடித்த புளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/57&oldid=1405018" இலிருந்து மீள்விக்கப்பட்டது